யாழ் தமிழ்த் திரை தயாரிப்பில் கதிரவன் இயக்கத்தில் கண்ணன், ஸ்ரீபிரியங்கா, மு.களஞ்சியம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கோடை மழை’.
சாம்பசிவம் இசையில் அனைத்துப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் வைரமுத்து.
படம் பற்றி இயக்குனர் கதிரவன் கூறியதாவது,
“இந்தப் படம் நெல்லைச் சீமையில் எடுக்கப்பட்ட படம். ராணுவ வீரர் ஒருவருக்கும் காவல் துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதை. இருந்தாலும் படத்தில் இனிமையான காதலும் உண்டு. கோடை காலத்திலும் மழை காலத்திலும் நடக்கும் கதை என்பதால் ‘கோடை மழை’ என படத்திற்குப் பெயர் வைத்தோம்.
நெல்லைப் பகுதியின் யதார்த்தமான வாழ்வியலை சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நெல்லை தமிழ்ப் பேச்சுடனேயே கதாபாத்திரங்களும் பேசுவார்கள்.
இப்படத்தை வைரமுத்து மிகவும் மனம் திறந்து பாராட்டினார். அவர் பொதுவாக அனைத்துப் படங்களையும் பார்க்க மாட்டார். அவர் பாடல்கள் எழுதிய படமாக இருந்தால் கூட சில படங்களை மட்டுமே பார்ப்பார். இந்தப் படத்தைப் பார்த்து நெகிழ்ச்சியுடன் எங்களைப் பாராட்டியது மறக்க முடியாத ஒன்று.
அவருடைய பாராட்டால் படக் குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள். கண்ணன், ஸ்ரீபிரியங்கா, மு.களஞ்சியம் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பும் இந்தப் படத்தில் அதிகம் பேசப்படும்,” என்றார்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.