விஜய் சேதுபதி நடித்து அருண்குமார் இயக்கி 2014-ல் வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படமாக அமைந்தது.
அந்தப் படத்தை இயக்கிய அருண்குமார் தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ‘சேதுபதி’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்க, வேல ராமமூர்த்தி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வன்சன் மூவீஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.
ஒரு போலீஸ் அதிகாரியின் யதார்த்தமான வாழ்க்கையை இந்தப் படத்தில் பதிவு செய்துள்ளோம் என்கிறார் விஜய் சேதுபதி.
“இந்தப் படத்துக்கு முதல்ல வேற ஒரு டைட்டில் தான் வச்சோம். ஆனால், சரியா செட் ஆகலை. ஒரு நாள் டைரக்டர் அருண், ‘சேதுபதி’ன்னு வைக்கலாமான்னு கேட்டாரு. சரியா இருக்கிற மாதிரி இருக்கு, ஆனால் சரியா இருக்குமான்னு தெரியலைன்னு சொன்னேன். என் பெயரையே டைட்டிலா வச்சில், அதிகமா இருக்குமோன்னு யோசிச்சேன், அப்புறம் ஏவிஎம்ல அனுமதி வாங்கி இந்த டைட்டிலை வச்சோம்.
இந்தப் படம் ஒரு அழகான உணர்வுபூர்மான குடும்பக் கதை. மனைவி, ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தைன்னு இருக்கிற ஒரு போலீஸ்காரரோட வாழ்க்கைதான் இந்தப் படம்.
வழக்கமா போலீஸ் கதையில வர்ற அரசியல் பத்தின விஷயங்கள் எதுவுமில்லை. ஒரு போலீஸ்காரர் சந்திக்கிற பிரச்சனைகளும், அதை அவர் தைரியமா எதிர் கொள்ற விஷயங்களும்தான் படத்தோட கதை. ஒரு பாசிட்டிவ்வான அம்சம் படத்துல இருக்கும்.
இந்தப் படத்துல நடிச்சி முடிச்சிட்டு, டப்பிங் பேசும் போதுதான் கவனிச்சேன். கதை கேட்ட போது இருந்ததை விட, படத்துல நடிக்கும் போது இருந்ததை விட, படமா பார்த்த போது, ரொம்ப பரபரப்பா படம் நகர்ந்தது. கணவன் மனைவிக்குள்ள இருக்கிற ரொம்ப அழகான ரொமான்சும் படத்துல இருக்கும்.
‘சேதுபதி’ வந்து நான் டிரை பண்ணியிருக்கிற ஒரு மாஸ் படம், ஆனால், யதார்த்தமான ஒரு படம்,” என்று படத்தின் மீது மேலும் மரியாதை சேர்க்கும் விதத்தில் படத்தைப் பற்றிச் சொல்கிறார் விஜய் சேதுபதி.