‘ஓ காதல் கண்மணி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.
அவருடைய புதிய படத்தில் துல்கர் சல்மான், கார்த்தி ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், எதுவுமே உறுதி செய்யப்படாமல் இருந்தது.
அதன் பின் அவர்களிருவருமே அந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றார்கள். தற்போது மேலும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி படத்தின் ஹீரோக்களாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், ‘பாகுபலி’ வில்லன் ராணா டகுபதியும் நடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.
நாகார்ஜுனாவை நாயகனாக வைத்து மணிரத்னம் 25 வருடங்களுக்கு முன் இயக்கிய ‘கீதாஞ்சலி’ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படம் தமிழில் ‘இதயத்தை திருடாதே’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் பெரும் வெற்றி பெற்றது.
மணிரத்னத்தின் புதிய படத்தில் நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் நாயகிகளாக நடிக்கலாம் என்றும் தெரிகிறது.
இந்தத் தகவலாவது உறுதியாகுமா அல்லது வழக்கம் போல மாற்றம் வருமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.