யதார்த்தமான பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும், இயல்பான நடிப்பும் கொண்ட நடிகையாக இருக்கிறார் ஸ்ரீபிரியங்கா.
‘கங்காரு’ படத்தில் பாசமழை பொழியும் தங்கை, ‘வந்தா மல’ படத்தில் ரகளையான வட சென்னைப் பெண்ணாக கலக்கியவர், தற்போது ‘கோடை மழை’ படத்தில் நெல்லை கிராமத்துப் பெண்ணாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்திற்காக பலரும் அவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தும் இன்னும் பெரிய அளவில் பேசப்படவில்லை என்ற ஆதங்கத்தில் இருந்த ஸ்ரீபிரியங்காவுக்கு ‘கோடை மழை’ படத்தின் மூலம் மீண்டும் கிடைத்த பாராட்டுக்கள் ஆனந்தத்தைக் கொடுத்திருக்கிறது.
பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கிய ‘கோடை மழை’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆரம்பத்தில் படம் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. இப்போது மெல்ல மெல்ல படம் குறித்த பேச்சுக்கள் நல்லவிதமாகப் பரவ, மகிழ்ச்சியில் இருக்கிறார் ப்ரியங்கா.
கோடை மழை பட அனுபவங்கள் குறித்துக் கேட்டபோது, இடைவிடாத மழை போல தனது அனுபவங்களை பொழிய ஆரம்பித்தார்.
“ஒரு உதவி இயக்குநர் மூலமாகத்தான் எனக்கு இந்தப் பட வாய்ப்பு வந்தது. கதை கேட்டதுமே, இது எனக்கு சரியான படமாக அமையும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. நான் நடித்த மூன்று படங்களிலுமே என் பாத்திரம் மக்களால் பேசப்பட்டது. மூன்று படங்களுமே நல்ல கதைதான். எனவே கதை கேட்டு, சரியான பாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இதுவரை நான் கோட்டை விட்டதில்லை.
கோடை மழை கிராமப் பின்னணியில் உருவான படம். எனக்கு நல்ல வேடம். பொதுவாக கிராமத்துப் பெண் வேடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்தப் படத்தில் இயக்குநர் சொன்னதை நான் செய்தேன். ஷூட்டிங்கில் நிறைய காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்கிக் கொண்டே இருப்பார் கதிரவன்.
நான், ‘இது எதற்கு? அது என்ன?’ என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பேன். கதிரவனோ, ‘நான் சொல்வதை மட்டும் செய்ங்க. அப்புறம் படத்தில் பாருங்க’ என்றார். அது எந்த அளவு உண்மை என்பதைப் படத்தில் பார்த்து வியந்தேன். படம் பார்த்த நிறையப் பேர் எனக்கு தியேட்டரிலிருந்தே போன் செய்து பாராட்டினார்கள்.
இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு நான் நடித்தது மறக்க முடியாதது. என் முதல் படம் கங்காருவிலும் அவர்தான் பாடல்கள் எழுதினார். இப்போது மூன்றாவது படத்துக்கும் அவர்தான் எழுதியிருக்கிறார். என்னை மாதிரி வளரும் நடிகைக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? கோடை மழையைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, ‘சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறாய்’ என்று என்னைப் பாராட்டினார். அது என் பாக்கியமாகக் கருதுகிறேன்.
படப்பிடிப்புக்கு முன்பாக எனக்கு அவருடைய பாடல் வரிகளைப் போட்டுக் கூடக் காட்டவில்லை. படப்பிடிப்பில், ‘எப்போ சார் சாங் ஷூட் பண்ணுவீங்க’ என்று இயக்குநரை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். அவரோ, ‘எடுக்கலாம்.. எடுக்கலாம்’ என்று சொல்வார். அவ்வப்போது, என்னை சில பாவங்கள் காட்டி நடித்துத் தரக் கேட்பார். ப்ரிவியூ பார்த்த போதுதான், அதெல்லாம் பாடல் காட்சிகளுக்காக எடுக்கப்பட்டவை என்பதே எனக்குத் தெரிய வந்தது.
கருப்பு நிறம் என்பது துருத்திக் கொண்டு தெரியாமல் அளவோடு இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை வெயில்ல நிக்க வச்சே படமாக்கினாங்க. வசனம் சொல்லிக் கொடுக்கும்போது கூட வெயில்லதான். அந்தப் பக்க வெயிலு வாட்டி வதைக்கும். நிழல்ல நிக்கலாம்னாலும் இயக்குநர் விடமாட்டார். அப்படியெல்லாம் செஞ்சதாலதான் இப்ப நீங்க பாராட்ற அளவுக்கு நிறம் அமைஞ்சது,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ப்ரியங்கா.
‘கோடை மழை’ படத்தைப் பற்றி சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்தவர் நாம் கேட்ட சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
‘கான்ட்ராவர்சி இயக்குநர் எனப்படும் சாமி படத்தில் ஒரு முறை நடித்த நாயகிகள் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்ததில்லை. ‘கங்காரு’ ப்ரியங்காவுக்கு மீண்டும் நடிக்கும் ஐடியா இருக்கா?…
“அவர் அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.”
‘இந்த மாதிரி வேடங்களில்தான் நடிக்க வேண்டும் என்ற பிடிவாதம் ஏதாவது உள்ளதா ?…
“அதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு வருகிற காமெடி, காதல், குறிப்பாக ‘நானும் ரவுடிதான்’ மாதிரியான படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கதை, பாத்திரத்தின் முக்கியத்துவம்… இரண்டும் பிடித்திருந்தால் போதும். நடிக்கத் தடை இல்லை.”
அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிப் பேசிய ப்ரியங்கா, “கோடை மழை’ மாதிரி நல்ல கேரக்டர்கள் அமைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு “சாரல், ரீங்காரம்” படங்களில் நடித்து வருகிறேன். ‘திருப்பதி லட்டு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன்,” என்றார்.
‘கோடை’யில் வறட்சிதான் அதிகம் இருக்கும், ஆனால் ப்ரியங்காவைப் பொறத்தவரை ‘கோடை மழை’, பாராட்டு மழையில் நனைய வைத்துவிட்ட படமாக அமைந்துவிட்டது.