இ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ, மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்க உருவான படம் ‘வர்மா’.
இந்தப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து பிப்ரவரி மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டது.
2018 செப்டம்பர் மாதம் டீசர், கடந்த மாதம் டிரைலர் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென இரு தினங்களுக்கு முன் படத் தயாரிப்பு நிறுவனம், ‘வர்மா’ படம் நாங்கள் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. அதனால், படத்தை வெளியிடப் போவதில்லை.
படத்தின் நாயகன் துருவ் தவிர மற்ற அனைவரையும் மாற்றிவிட்டு, மீண்டும் படப்பிடிப்பு நடத்தி ஜுன் மாதம் படத்தை வெளியிடுகிறோம் என அறிவித்தார்கள்.
இதுவரை இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு எந்த ஒரு படத்திற்கும் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது- இந்த விவகாரம் திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தேசிய விருதுகள், மாநில விருதுகள், பல தனியார் விருதுகள் என வாங்கி, தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களில் ஒருவர் என பாராட்டப்படும் பாலா இயக்கிய படத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என திரையுலகத்தில் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த விவகாரம் குறித்து பாலா என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் காத்திருந்த நிலையில், சற்று முன் பாலா அவரது தரப்பு விளக்கத்தை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை…
வர்மா படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்ப்பந்ததிற்கு ஆளாக்கப் பட்டிருக்கிறேன்.
படைப்பு சுதந்திரம் கருதி, வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதியே தயாரிப்பாளர் உடன் இதற்காக செய்து கொண்ட ஒப்பந்தம் தங்களின் கனிவான பார்வைக்கு…
துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை.

‘வர்மா’ படத் தயாரிப்பு நிறுவனமான இ4 என்டர்டெயின்மென்ட், இயக்குனர் பாலா ஆகியோருக்கிடையேயான விலகல் ஒப்பந்தம்

