பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், துருவ, மேகா, ஈஸ்வரிராவ், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிக்க உருவான ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை என படத்தைத் தயாரித்த இ 4 என்டர்டெயின்மென்ட் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தது.
தெலுங்கில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகத்தான் உருவானது ‘வர்மா’.
பாலா எடுத்துக் கொடுத்த ‘வர்மா’ படம் தங்களுக்குத் திருப்தியை அளிக்கவில்லை அதனால் நாயகன் துருவ்வைத் தவிர மற்றவர்களை மாற்றிவிட்டு படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என்று அறிவித்தார்கள்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக இன்று இரவு பாலா அவரது தரப்பு விளக்கத்தை அளித்தார். படைப்பு சுதந்திரம் கருத்தி படத்திலிருந்து விலகிக் கொள்வது தான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், அவருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே புரிந்து கொண்ட விலகல் ஒப்பந்தத்தையும் வெளியிட்டார்.
அதில், “என்னுடைய பெயர் இந்தப் படத்திலிருந்து இந்த நிகழ்வுக்குப் பின் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். இந்தப் படத்தில் ஏதாவது மாற்றம் செய்தால், அல்லது படத்தின் டைட்டில், பேட்டிகள், விளம்பர டிசைன்கள், பத்திரிகையாளர் சந்திப்பு, பிரமோஷன் நிகழ்வுகள் என எந்த விதத்திலும் இந்தப் படத்துடன் கண்டிப்பாக இணைத்தோ, குறிப்பிடப்பட்டோ இருக்கக் கூடாது,” என்று இடம் பெற்றுள்ளது.
பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை என அறிவித்த பிறகு, பாலாவும் அதிலிருந்து தானாகவே விலகுகிறேன் என ஒப்பந்தம் போட்ட பிறகு, ‘வர்மா’ படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை யு டியுபிலிருந்து நீக்கப்படுமா என்பது திரைப்பட ரசிகர்களின் சந்தேகமாக உள்ளது.
‘வர்மா’ பட டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. ‘வர்மா’ பட டிரைலர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இவற்றை யு டியுபிலிருந்து தயாரிப்பு நிறுவனம் நீக்குமா இல்லையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.
இரண்டையும் பார்க்க விரும்புபவர்கள் அதற்குள் பார்த்துவிடவும்.