தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சில படங்கள் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் ஆகியவற்றால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.
ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள், நாயகிகளுக்கான உடை அமைப்புகள் கடும் கண்டனங்களை சந்தித்தன.
அந்த வரிசையில் தற்போது பெண் இயக்குனரான அனிதா உதீப் என்கிற அழகிய அசுரா இயக்கத்தில் வெளிவர உள்ள ‘90 எம்எல்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதன் காட்சிகளும், வசனங்களும் இப்படி ஒரு ஆபாசமா என டிரைலரைப் பார்த்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற ஓவியா நடித்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு அதிக காரணம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நேர்மையான நடத்தை, குணம், மற்றவர்களிடம் அவர் பழகிய விதம் அவருக்கு ‘ஓவியா ஆர்மி’ என்று உருவாக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப் பெயரை இந்த ஒரு பட டிரைலரிலேயே கெடுத்துக் கொண்டுள்ளார் ஓவியா.
இந்த டிரைலர் குறித்து அவருடைய டிவிட்டரில், “பழத்தை ருசிப்பதற்கு முன்பு விதையை வைத்து தயவு செய்து முடிவு செய்யாதீர்கள். சென்சார் செய்யப்பட்ட 90எம்எல் முழு படத்திற்காகக் காத்திருங்கள். இப்போது பருவம் வந்தவர்களுக்கான 90எம்எல் டிரைலரை ரசியுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
‘90எம்எல்’ டிரைலர் குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. சில இயக்குனர்கள் இப்படிப்பட்ட படத்தைக் கொடுப்பதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். சில இயக்குனர்கள் இப்படிப்பட்ட படங்கள் வருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
எப்படியோ ஒரே நாளில் இந்த டிரைலர் 20 லட்சம் பார்வைகளை டிவிட்டரில் தொடவிருக்கிறது. படம் வெளிவரும் போது அதைப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் முண்டியடித்துச் செல்லும்.