விஜய் நடித்த ‘பகவதி’ படத்தில் அவருடைய தம்பியாக நடித்து நடிகராக அறிமுகமானவர் ஜெய்.
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன். ‘சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி’ என சில சிறப்பான படங்களை தன் வெற்றிப் படங்களின் பட்டியலில் வைத்திருப்பவர்.
தமிழில் மட்டுமே நடித்து வந்த ஜெய் தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘மதுர ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஜெய்யின் 25வது படம்.
இதுவரை பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுக்காதவர், நடிகராக அறிமுகமான இத்தனை வருடங்களில் இப்போதுதான் சந்தித்து பேட்டி கொடுத்துள்ளார்.
‘‘பகவதி’ படத்தில் நடிகனாக அறிமுகமானதில் இருந்து இதுவரை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறேன்.
அதன்பின் நான் நாயகனாக நடித்துள்ள பல படங்கள் அறிமுக இயக்குனர்களின் படங்கள்தான். அவர்கள் சொல்லும் கதைகளில் என்னைக் கவர்ந்த கதைகளில் நடிக்க சம்மதித்து வந்திருக்கிறேன்.
கதை கேட்கும் போது பல படங்கள் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால், படமாகும் போது பல்வேறு காரணங்களால் அவை வேறு விதமாக அமைந்து ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன.
நான் இதுவரை பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்தது இல்லை. எனக்கு அடையாளமாக வெற்றிகரமாக அமைந்த படங்களான ‘சென்னை 28, சுப்பிரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி,’ ஆகிய படங்கள் கூட அறிமுக இயக்குனர்களின் படங்கள்தான். இப்படி பல படங்களைச் சொல்லலாம். ‘கலகலப்பு 2, பார்ட்டி’ போன்ற ஓரிரு படங்கள் மட்டும்தான் இதில் விதிவிலக்கு.
இசையமைப்பாளர் தேவா அப்பா அலுவலகத்திற்கு பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போதெல்லாம் பல உதவி இயக்குனர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் பேசும் போது அவர்கள் பத்து வருடங்கள் உதவி இயக்குனர்களாக இருந்த பட்ட கஷ்டங்களைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.
ஒரு உதவி இயக்குனர், இயக்குனராக பட வாய்ப்பு கிடைப்பதென்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும். அதனால்தான், இதுவரை நான் நடித்துள்ள பல படங்களில் அறிமுக இயக்குனர்களே அமைந்திருக்கிறார்கள்.
பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தால் தொடர்ந்து எனக்கான வெற்றியைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். அதனால்தான், என்னுடைய திரையுலகப் பயணத்தில் ஏற்ற, இறக்கம் உள்ளது.
அப்போது, எனக்கு கமர்ஷியலா பெரிய ஹீரோவாகறதவிட, பல புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது மனதுக்குத் திருப்தியா இருந்தது. நான் பெரிய இயக்குனர்களா பார்த்துப் பண்ணியிருந்தால் என் மார்க்கெட்டை ஸ்டெடியா வச்சிருந்திருக்கலாம்.
இருந்தாலும் பல அறிமுக இயக்குனர்கள் இயக்கத்துல நடிச்சி, இப்போது 25வது படத்துல நடிச்சிட்டிருக்கிறேன்.
என்னைப் பற்றி அடிக்கடி வதந்திகள் வருவதைப் பார்த்துட்டுதான் இருக்கிறேன். அதையெல்லாம் நான் பெரிய விஷயமா எடுத்துக்கறதில்லை. எனக்கென எந்தக் காதலும் இல்லை, இப்போது வரைக்கும் சிங்கிளாதான் இருக்கிறேன். அப்படியான வதந்திகளைப் பார்த்து சிரிச்சிட்டுப் போயிடுவேன். நடிக்கிறதுல சின்சியரா இருந்துட்டிருக்கேன்.
நான் நடித்துள்ள ‘நீயா 2, பார்ட்டி’ ஆகிய படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. மலையாளத்தில் மம்முட்டி சார் தம்பியாக ‘மதுர ராஜா’ படத்தில் நடிக்கிறேன். படத்தில் நான் தமிழ் பேசி நடிக்கும் கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளேன்.
தமிழில், ‘அறம்’ இயக்குனர் கோபி இயக்கத்தில் ‘கருப்பர் நகரம்’ படத்தில் நடிக்கிறேன். சத்யராஜ் சாருடன், ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் நடித்து வருகிறேன். மேலும், சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். சில படங்களுக்கான பேச்சு வார்த்தைகள் போய்க் கொண்டிருக்கிறது.
விழாக்களுக்கு வருவதில்லை, பேட்டிகள் கொடுப்பதில்லை என்று என்னைப் பற்றி எப்போதுமே சொல்வார்கள். இனி, அப்படி இருக்கப் போவதில்லை. அனைத்து விழாக்களுக்கும் வருவேன், அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்திக்கவும் முடிவு செய்துள்ளேன்,” என்று ஜெய் கூறுகிறார்.