கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் ராஷ்மிகா

கார்த்தி நடிக்கும் புதிய படத்தை ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக, தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘கீதா கோவிந்தம்’ படக் கதாநாயகி ராஷ்மிகா இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி அவர்கள் கூறியதாவது,

“கார்த்தி நடிக்கும் 19வது படமான இந்தப் படம் எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் விதமாக உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு உட்பட ஹைதராபாத்திலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அனைத்து குடும்பத்தினரிடமும் பெரும் ஆதரவு பெற்ற கார்த்தியின் ‘சிறுத்தை, கடைக்குட்டி சிங்கம்’ ஆகிய படங்கள் போன்று இப்படமும் அனைவரையும் கவரும் என்று,” தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள். இப்படத்தை S.R.பிரகாஷ்பாபு, S.R.பிரபு இணைந்து தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

இசையமைப்பாளராக விவேக் – மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன், புரொடக்‌ஷன் டிசைனராக ராஜீவன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறது இப்படக்குழு. படப்பிடிப்பு மார்ச் 2-ம் வாரத்திலிருந்து தொடங்க உள்ளது.

‘ஜோக்கர், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி’ ஆகிய படங்களுக்குப் பிறகு டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது, ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 18வது படத்தையும் தயாரித்து வருகிறது. இப்படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

Read Previous

கண்ணே கலைமானே – விமர்சனம்

Read Next

எல்கேஜி – விமர்சனம்

Most Popular