கண்ணே கலைமானே – விமர்சனம்

சினிமா என்பது காலம் காலமாக ஒரு இலக்கணத்துடன் படைக்கப்பட்டு வருகிறது. சில படங்கள் அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்படுகின்றன. அதில் சில வரவேற்பைப் பெறும். சில எதிர்ப்புகளைப் பெறும்.

இந்த ‘கண்ணே கலைமானே’ படத்தில் சினிமாவுக்கான எந்த அம்சம் படத்தில் அப்படியே இடம் பெற்றுள்ளது என்று யோசிக்க வைக்கிறது.

எந்தவிதமான திரைமொழியில் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி கொடுத்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம். மென்மையான கதாபாத்திரங்கள், மேலோட்டமான விறுவிறுப்பில்லாத திரைக்கதை என படம் நகர்கிறது.

உதயநிதி ஸ்டாலினின் வழக்கமான ஜாலியான படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் அதிகமிருக்கும். அதே சமயம், எந்த மாதிரியான கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என உதயநிதி நிரூபித்திருக்கும் படம் இது. அதற்காக இயக்குனரைப் பாராட்டலாம். கூடுதலாக, இயற்கை விவசாயம் பற்றி வலியுறுத்தியதற்கும் சேர்த்து பாராட்டலாம்.

உதயநிதியின் கதாபாத்திரம் இயற்கை விவசாயி கதாபாத்திரம் என்பதால், திரைக்கதையில் இன்னும் வேறு விவசாயம் சார்ந்த பிரச்சினைகளைச் சேர்த்து இன்னும் ஒரு வலிமையான படமாகக் கொடுத்திருக்கலாம். ஆனால், ஏழை மக்கள் லோன் பெற சாட்சி கையெழுத்து போடுவதற்கும், இயற்கை உரங்களைப் பயன்படுத்துங்கள் என்று சொல்வதற்கும் என சில காட்சிகளில் மட்டும் சொல்வதுடன் முடித்துக் கொள்கிறார்கள்.

தமன்னா கதாபாத்திரத்தைச் சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது. கிராம வங்கி மேனேஜர் ஆக தமன்னா. வங்கி தந்த கடன்களை வசூலிப்பதில் கறார் ஆக இருக்கிறார். உதயநிதியும் கடன்காரர் என நினைத்து அவரைத் தேடிச் சென்று அதட்டுகிறார். பின்னர் அவர் யாருக்காக கடன் வாங்கித் தந்தார் என்பதை அறிந்து அவர் மீது அன்பாகி, காதலாகி, பின்னர் மனைவியும் ஆகிவிடுகிறார். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட கிளாமர் இல்லாத கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் தமன்னாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

மொத்த படத்தில் ஒரே ஒரு பிரச்சினைதான் கதையின் திருப்பமாக வருகிறது. அதுவும் நீண்ட நேரம் கதையை நகர்த்தாமல் சட்டென்று கிளைமாக்சை நோக்கி நகர்ந்து முடிந்து போகிறது.

மற்ற கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி, பூ ராமு, வசுந்தரா சில காட்சிகளில் மட்டுமே அவர்களது திறமையை வெளிப்படுத்த முடிகிறது.

யுவன், வைரமுத்து கூட்டணியில் ‘எந்தன் கண்களைக் காணோம், நீண்ட மலரே’ பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

கண்ணே கலைமானே – அழகு மான்

Read Previous

‘தலைவா’ டிசைனில் ‘தலைவி’ படம்

Read Next

கார்த்தி ஜோடியாக அறிமுகமாகும் ராஷ்மிகா