பாண்டிச்சேரி இளைஞர்களுக்குப் பெருமை சேர்க்கும் ‘நட்பே துணை’

அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகி அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த், விஜய் குமார், சுட்டி அரவிந்த், ராஜ்மோகன், வினோத், குகன், தங்கதுரை, பிஜிலி ரமேஷ், பாலாஜி, அஜித், பூவேந்தன், இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு, தேவேஷ், பிரதீப் தினேஷ், சிவராக் ஷங்கர், ப்ரீத்தி நாராயணன், மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுந்தர்.சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சுந்தர் .சி பேசும் போது,

“ஒருநாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

என் மனைவியிடம் ‘மீசைய முறுக்கு’ படம் வெற்றியடைந்தால் ஆதிக்கு வெளி வாய்ப்புகள் தேடி வரும். ஒருவேளை படம் சரியாகப் போகவில்லையென்றால் அடுத்த படத்தை ஆதியை வைத்தே எடுப்போம் என்று கூறியிருந்தேன். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. நான் நினைத்தது போலவே வெளி வாய்ப்புகள் வந்தன. அப்போது நான் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்தேன். ஆதி என்னைத் தொடர்பு கொண்டு, ஒரு கதை இருக்கிறது கேளுங்கள் என்றார்.

கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என் படத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியைப் பற்றி படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன்,” என்றார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசுகையில்,

“அதிக வாய் பேசிய என்னை ‘ஆம்பள’யில் அறிமுகப்படுத்தி, ‘மீசைய முறுக்கு’ படத்தில் என் கனவை நனவாக்கி ‘நட்பே துணை’யில் இப்படியொரு வாய்ப்பைக் கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.

இப்படத்தின் கதையைக் கூறும்போதே பெரிய தொகை செலவாகும் என்று தெரிந்தது. சுந்தர்.சி அண்ணாவிடம் கூறியதும் தயாரிக்க சம்மதித்தார்.

‘மீசைய முறுக்கு’ படத்தில் இருக்கும் மொத்த குழுவும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். தேவேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் அவர்களின் வேலையை ஒத்திவைத்து எனக்காக இப்படத்தை முடித்துக் கொடுத்தார்கள்.

பள்ளியில் கூடைப்பந்து விளையாடியிருக்கிறேன். இப்படத்திற்காக ஹாக்கி விளையாடியிருக்கிறேன். இதில் இரண்டு குழுவில் 22 பேரில் 10 பேர் நிஜ ஹாக்கி வீரர்கள். அவர்களுக்கு இணையாக விளையாட வேண்டும் என்பதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்தோம். அதற்காக ஹாக்கி பயிற்சியாளர் குணசீலன் பயிற்சியளித்தார்.

ஒருநாள் ‘ஹாக்கி ஸ்டிக்’ என்று கூறுவதற்கு பதில் ‘பேட்’ என்று கூறிவிட்டேன். அதற்காக இரண்டு சுற்று ஓட விட்டார் கோச். எங்களுடன் அனகாவும், காலில் அடிபட்டும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டார். இப்படத்தின் கடைசி 35 நிமிடங்களில் எங்களுடைய அர்ப்பணிப்பு அனைவருக்கும் தெரியும்.

கரு.பழனியப்பன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எல்லோராலும் பேசப்படும்.

மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இந்தப் படம் இருக்கும்,” என்றார்.

இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு பேசுகையில்,

“படத்தை விளையாட்டுக் களமாக, புதுமையான களமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாண்டிசேரியைத் தேர்ந்தெடுத்தோம். விளையாடும் மைதானத்தில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,000 ரூபாய் கட்டணம் கொடுத்து பயிற்சியளித்தோம்.

சாதாரண களத்தில் விளையாடுவதைவிட ஹாக்கி டர்ஃபில் விளையாடுவது மிகவும் கடினம். நிஜ வீரர்களுக்கே தொடர்ந்து விளையாடுவது இயலாது. அப்படி இருக்கையில் படத்தில் நடித்தவர்கள் நாள் முழுக்க இடைவிடாமல் நடித்தார்கள். தினமும் ஒருவர் மயங்கி விழுவார்.

ஆதிக்கு கழுத்தில் அடிபட்டும் மனம் தளராமல் சிறிது இடைவெளியில் மீண்டும் நடித்து முடித்தார். மேலும் இப்படத்தில் நடித்த அனைவருமே தங்களுடைய சொந்த படமாக நினைத்து பணியாற்றினார்கள்.

பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் என்றாலே மது அருந்துவார்கள், புகைபிடிப்பார்கள் என்ற ஒரு தவறான எண்ணம் எல்லோர் மனதிலும் உண்டு. ஆனால் இப்படத்தின் மூலம் பாண்டிச்சேரியில் இருக்கும் இளைஞர்கள் பெருமைப்படலாம்,” என்றார்.

Read Previous

தமிழ் சினிமா – மார்ச் 1, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

Read Next

நதிநீர் இணைப்பைப் பேசும் ‘பூமராங்’

Most Popular