தமிழ்த் திரையுலகத்தில் ஒரு காலத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் 3 பேர் மட்டுமே.
ரஜினிகாந்த், அவருக்கு அடுத்து ராஜ்கிரண், அவருக்கும் அடுத்து பிரபுதேவா.
தன்னுடைய நடனத்தாலும், நகைச்சுவை நடிப்பாலும் கடகடவென ஹீரோ அந்தஸ்தில் உயர்ந்து நின்றார் பிரபுதேவா. ஒரு கட்டத்தில் அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வியடைய நடிப்பதை விட்டே விலகினார்.
சுமார் 12 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது ‘தேவி’ படத்தில் நடித்துள்ளார். தன்னுடைய ஹிந்தி மார்க்கெட் வளர்த்துக் கொள்வதற்காகவே அவர் இந்தப் படத்தை முழுக்க முழுக்க ஹிந்தியில் எடுத்துள்ளார்.
தமிழிலும், தெலுங்கிலும் அதை டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். ஆனால், மூன்று மொழித் தயாரிப்பு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
தமிழில் நடித்துக் கொண்டிருந்த போது மீடியாக்களிடமே நெருங்காமல் இருந்தவர் பிரபுதேவா. ‘போக்கிரி’ படத்தை இயக்கிய சமயத்தில் கொஞ்சம் இறங்கி வந்தார். அடுத்து ‘வில்லு’ படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் பேட்டி கொடுத்தார்.
ஹிந்திக்குப் படம் இயக்கப் போன பிறகு அங்கு அவருடைய படங்களுக்கான அனைத்து பிரமோஷன்களிலும் கலந்து கொண்டார்.
இப்போது ‘தேவி’ படத்தை அவரே தயாரித்து நடிப்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, வட மாநிலங்கள் என ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ரெமோ’, விஜய் சேதுபதி நடித்துள்ள ‘றெக்க’ படங்களுடன் இப்படமும் போட்டியில் இறங்கியுள்ளது. இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்துள்ள அவர்களுடன் பிரபுதேவா தன்னுடைய ‘தேவி’ படத்தை வெளியிட தத்தளிப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
தயாரிப்பாளராக மாறிய பின்பு படங்களைப் பிரமோஷன் செய்ய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்பது பிரபுதேவாவிற்கு இப்போது புரிந்திருக்கும்.