தமிழ்நாடு மக்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் நெஞ்சங்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவரும், அதிமுக தொண்டர்களால் ‘அம்மா’ என அன்புடன் அழைக்கப்படட்டவருமான ஜெ. ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார்.
அவரது உடல் போயஸ் கார்டன் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று அதிகாலையிலேயே சென்னை, ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது.
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல தேசியத் தலைவர்கள், வெளிமாநிலத் தலைவர்கள், முதல்வர்கள், கவர்னர்கள், தமிழக அரசியல்வாதிகள், திரையுலகத்தினர், லட்சோப லட்சம் மக்கள்உ நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று மாலை சென்னை கடற்கரையில் எம்ஜிஆர் சமாதி வளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்த் தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல தொலைக்காட்சிகள் அம்மாவிற்கு மக்கள் அஞ்சலி செலுத்தியரை நேரடியாக ஒளிபரப்பு செய்தன.
தமிழ்நாடே சாலைகள் வெறிச்சோடியும், கடைகள் அடைக்கப்பட்டும் இருந்தது. இன்று நாள் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
திரையுலகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்து எம்ஜிஆருடன் மட்டும் 28 படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை திரையுலகில் உருவாக்கியவர்.
அரசியலிலும் நுழைந்து குறுகிய காலத்தில் பலரது அபிமானத்தையும் பெற்று, அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல்வாதிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, இந்திய அரசியல் உலகிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர்.
ஆறு முறை முதல்வராகப் பதவியேற்றவர், தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் போதே மறைந்து போனார்.
அவர் மறைந்தாலும், மக்களின் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பார்.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.