2007ம் ஆண்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான படம் ‘சென்னை 28’.
ஒரு ஜாலியான நண்பர்களின் கொண்டாட்டமாக வெளிவந்த அந்தப் படம் வழக்கமான மசாலாப் படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு வித்தியாசமாக அமைந்தது.
தொலைக்காட்சிகளில் அடிக்கடி அந்தப் படத்தின் பாடல்களையும், காட்சிகளையும் ஒளிபரப்பியதால் படம் பற்றிய விஷயங்கள் ரசிகர்களைச் சென்றடைந்தது. படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்து இயக்கிய ‘சரோஜா, கோவா’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.
இருந்தாலும் அவரை அழைத்து ‘மங்காத்தா’ படத்தை இயக்கும் பெரிய வாய்ப்பைத் தந்தார் அஜித். சன் டிவியின் பிரம்மாண்டமான விளம்பரங்களால் அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அஜித்துக்கே திருப்பு முனை தந்தவர் என வெங்கட் பிரபுவை திரையுலகத்தினரும், ரசிகர்களும் கொண்டாடினார்கள்.
அதனால், அடுத்து கார்த்தி நடித்த ‘பிரியாணி’ படத்தையும், சூர்யா நடித்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தையும் இயக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களும் தோல்வியடைய வெங்கட் பிரபுவுக்கு அடுத்து யாரும் வாய்ப்பு வழங்கவில்லை.
அவரே சொந்த பட நிறுவனத்தை ஆரம்பித்து, ‘சென்னை 28’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, இன்று வெளியிட்டுள்ளார்.
படத்தின் முதல் பாகத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றி பெற்றது போல, இந்தப் படமும் ரசிகர்களிடம் பெரிய வெற்றியைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ‘சென்னை 28’ படம் திணறியுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன.
அழுத்தமான கதை இல்லாததும், விறுவிறுப்பான திரைக்கதை இல்லாததும் படத்திற்கு மைனஸ் பாயின்டாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மட்டும்தான் என்கிறார்கள்.
கதை இல்லாமல் ஒரு முறை வெற்றி பெறலாம் தொடர்ந்து வெற்றி பெற முடியுமா..?. உட்கார்ந்து யோசிங்க பாஸ்…