தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரன் இன்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 79.
“முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு, மெட்டி, அழகிய கண்ணே, கை கொடுக்கும் கை, கண்ணுக்கு மை எழுது, ஊர் பஞ்சாயத்து, சாசனம்,” ஆகிய படங்களை இயக்கியவர்.
இதில், “முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் படங்கள்.
1966ல் வெளிவந்த ‘நாம் மூவர்’ என்ற படத்தில் கதை எழுதியதன் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார். அவர் கதை வசனம் எழுதிய படங்களில் முக்கியமான படம் சிவாஜிகணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’.
சில வருடங்களுக்கு முன்பு அவர் நடிகராகவும் அறிமுகமானார். விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் வில்லனாகவும் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த ‘பேட்ட, பூமராங்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். வெளிவர வேண்டிய இன்னும் சில படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.