தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த போட்டியும், சர்ச்சையும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஓரிரு வருடங்களுக்கு முன்பு வரை இந்த பரபரப்பு அதிகம் இருந்தது.
ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ திரைப்படம் 2014ம் ஆண்டு வெளிவந்து தோல்வி அடைந்தது. அதன் பின் முதலிடத்தில் விஜய்யா, அஜித்தா என்றும் பேச ஆரம்பித்தார்கள். ரஜினிகாந்தை மட்டுமே திரைப்பட வினியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் ரஜினிகாந்த் மட்டுமே என்று கூறி வந்த நிலை மாறியது.
இன்றைய இளம் ரசிகர்களால் விஜய்யும், அஜித்தும் மட்டுமே கொண்டாடப்படுகிறார்கள் என்றும் அவர்களில் ஒருவர்தான் அடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் பேச ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து தமிழ்த் திரையுலகத்தில் ஒரு புதிய சர்ச்சை எழுந்தது.
ஆனால், ‘கபாலி, 2.0’ படங்களில் ரஜினிகாந்த் நடிக்க ஆரம்பித்த பின் அந்த சர்ச்சை அப்படியே அடங்கிப் போனது. அதிலும் ‘கபாலி’ படம் கடந்த வருடம் வெளிவந்த பின் அந்தப் படம் வசூலில் புதிய சாதனை படைத்தது என்ற தகவல் வெளியானது. அதோடு, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘2.0’ திரைப்படம் இந்திய அளவில் அதிக பொருட்செலவில் தயாராகும் படம் என்று சொல்லப்படுவதாலும் ரஜினிகாந்திற்கு அடுத்து யார் என்ற பேச்சும் கூட அமைதியாக அடங்கிப் போனது.
இருந்தாலும் விஜய், அஜித் இருவர்தான் தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்கள் என்று அவர்கள் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கருத்து மோதல்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். அது இப்போதும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தில் சூர்யாதான் இருக்கிறார் என சூர்யாவின் படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். சூர்யா நடித்து பிப்ரவரி 9ம் தேதி வெளியாக உள்ள ‘சி 3’ படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய கே.இ.ஞானவேல் ராஜா, “சூர்யாவின் ரசிகர்கள் எங்களிடம் அவர் படத்தின் வசூலைப் பற்றி எதுவுமே வெளியில் சொல்ல மாட்டேன் என சண்டை போட்டார்கள். மற்றவர்கள் சொல்கிறார்கள், நாங்கள் ஏன் சொல்வதில்லை என்று கேள்வி கேட்டார்கள். எங்களைப் பொறுத்தவரையில் எதையும் பொய்யாகச் சொல்லக் கூடாது என்று இருந்தோம். அவர் படங்களைப் பற்றிய வசூலை வெளியில் சொன்னால் அதனால் வேறு யாரும் காயம்பட்டுவிடக் கூடாது என்று சூர்யா நினைப்பார்.
இந்த முறை அவருடைய ரசிகர்களுக்காக சில விஷயங்களை இங்கே பகிர வேண்டும் என விரும்புகிறேன். வியாபாரத்தை வைத்து மட்டுமே நம்பர் 1, நம்பர் என்பது இருக்கிறதென்றால், வியாபாரமாக ரஜினிக்கு அடுத்து அதிக பட்ச வியாபாரம் இருப்பது சூர்யாதான் என என்னால் கண்டிப்பாகச் சொல்ல முடியும்.
நிறைய பேர் வாங்கும் சம்பளத்தை வைத்துதான் நம்பர் 1, நம்பர் 2 என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அப்படி கிடையாது. ‘சி 3’ படத்தைப் பொறுத்தவரையில் பட வெளியீட்டிற்கு முன்பாகவே 100 கோடி ரூபாயை இந்தப் படத்தின் வியாபாரம் தொட்டுள்ளது.
தெலுங்கிலயும் ரஜினிக்கு அடுத்து அதிகமான வியாபாரம் இருக்கிற ஹீரோ சூர்யா தான். நிறைய பேர் திரும்பத் திரும்ப தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். ஒரு படத்தின் வசூலைப் பற்றி வெளியிடுவதென்றால் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களிடம் கேட்டு வெளியிட்டால் மட்டுமே சினிமா ஆரோக்கியமாக இருக்கும்,” என்று கே.இ.ஞானவேல் ராஜா பேசினார்.
ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தில் விஜய், அஜித் இருவர்தான் இருக்கின்றனர் என அவர்களது ரசிகர்கள் கூறி வரும் நிலையில் ‘சி 3’ படத் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா பேசியிருப்பது புதிய சர்ச்சையை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளது.
அவருக்கு முன்னதாகப் பேசிய ‘சி 3’ படத்தின் வியாபார நிர்வாகத்தைக் கவனித்து வரும் சக்திவேலன், “சி 3’ படத்திற்கு தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இப்படம் 200 கோடி ரூபாயை நிச்சயம் வசூலித்து விடும். அதோடு 300 கோடி ரூபாயைத் தொடவும் வாய்ப்புள்ளது,” என்றார்.
இது சமூக வலைத்தளங்களில் உடனடியாக விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளது. ஒரு பக்கம் விஜய், அஜித் ரசிகர்கள் சூர்யாவை விமர்சித்து கருத்துக்களை பதிவிட, சூர்யாவின் ரசிகர்கள் தமிழிலும், தெலுங்கிலும் சேர்த்து அதிக ரசிகர்களை ரஜினிக்குப் பிறகு வைத்திருப்பவர் சூர்யா மட்டுமே என்றும் கூறி வருகிறார்கள்.