போகன் – மீண்டும் ‘மீன் குழம்பு’ கதையா ?

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக ஆங்கிலப் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்படும் படங்கள் குறைந்து போனது.

யு டியூப் போன்றவை தற்போது அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவதால் தமிழ்ப் படங்களும் உலக அளவில் சென்றடைகின்றன. அதே போல எந்த ஒரு உலக மொழித் திரைப்படத்தையும் தமிழ் ரசிகர்கள் பார்க்கவும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பே ‘போகன்’ படத்தின் கதை விவகாரத்தில் ‘பஞ்சாயத்து’ ஏற்பட்டு அதன் பின்னர் அது எப்படியோ தீர்த்து வைக்கப்பட்டது. ஆங்கிலப் படத்தை இன்ஸ்பிரேஷன் ஆக வைத்துத்தான் ‘போகன்’ படத்தை இயக்கியிருக்கிறேன் என படத்தின் இயக்குனரே சொன்னார்.

‘போகன்’ படத்தின் கதை 1997ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான ‘Face Off’ மற்றும் 2003ல் வெளிவந்த ‘Freaky Friday’ ஆகிய படங்களைப் பார்த்து ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

‘Freaky Friday’ படத்தின் கதையை காப்பியடித்துத்தான் கடந்த வருடம் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற படம் வெளிவந்தது.

அப்பா மகனாகவும், மகன் அப்பாவாகவும் மனதளவில் மாறி அவரவர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதுதான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ படத்தின் கதை. இந்தப் படத்தின் ஒரிஜனலான ‘Freaky Friday’ படத்தில் அப்பா, மகன் என்பது அம்மா, மகளாக இடம் பெற்றிருந்தது.

‘மீன் குழம்பும் மண் வாசனையும்’ படம் வந்த சுவடே தெரியாமல் தோல்வியடைந்தது. அதற்குக் காரணம் படத்தின் முரண்பட்ட கதை. அப்பா பிரபு உடலில், மகன் காளிதாஸ் மனம் புகுந்துவிடும். மகன் காளிதாஸின் காதலியான ஆஷ்னா சவேரியை, அப்பா பிரபு காதல் செய்வார். கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா…?

‘போகன்’ படத்தில் போலீஸ் அதிகாரியான ஜெயம் ரவியும், கேங்ஸ்டரான அரவிந்த்சாமியும் மனதளவில் மாறி என்ன செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.

இன்னும் 24 மணி நேரம்தான். ‘போகன்’ படம் எங்கிருந்தெல்லாம், கடல் கடந்து வந்து கதையானது என்பது தெரியப் போகிறது.

Read Previous

Kuttram 23 on 2 March

Read Next

வியாபாரத்தில் அஜித், விஜய்யை முந்திய சூர்யா