விவசாயத்துக்கு ஆதரவு தரும் ‘தெரு நாய்கள்’

ஸ்ரீபுவால் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் அப்புக்குட்டி, அக்சதா ஆகியோருடன் பிரதிக், ‘கோலிசோடா’ புகழ் நாயுடு, ‘தெறி’ வில்லன் தீனா, மைம் கோபி, இமான் அண்ணாச்சி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் ராம்ஸ், கூல் சுரேஷ், சம்பத் ராம், பவல், ஆறு பாலா, கஜராஜன், வழக்கு எண் முத்துராமன் நடித்துள்ள படம் ‘தெரு நாய்கள்’.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என விவசாயத்துக்கு எதிரான பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தத் ‘தெரு நாய்கள்’ படத்தில் எரிவாயு குழாய் புதைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் பதிவாக இந்தப் படம் உருவாகி வருகிறது.

‘‘தெரு நாய்கள்’ என்கிற டைட்டிலுக்கும் இந்த மாதிரியான எரிவாயு குழாய் பதிக்கும் கார்ப்பரேட் திட்டங்களுக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வி எழலாம். ஆனால் கதைக்குப் பொருத்தமாகத்தான் இந்த டைட்டிலை படத்துக்கு வைத்தோம். படம் பார்க்கிற போது இந்தப் படத்துக்கு இந்த டைட்டில் மிகவும் பொருத்தமானது தான் என்று ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

படத்தில் நாயகன், நாயகி என்று யாருமே இல்லை. கதையில் வருகிற ஒவ்வொரு கேரக்டரும் ஒரு கதையின் நாயகர்களாக வருவார்கள். கார்ப்பரேட் அரசியலைப் பற்றிப் பேசும் படமாக இருந்தாலும் எந்த கார்ப்பரேட் நிறுவனத்தையும், தனிப்பட்ட அரசியல்வாதியையும் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக இருக்காது. அவர்களை தாக்கும் படமாகவும் இருக்காது.

போராட்டத்தைப் பற்றி மட்டும் சொல்லாமல், ஒரு கமர்ஷியல் படத்திற்குரிய விஷயங்கள் அனைத்தையும் படத்தில் வைத்திருக்கிறோம்,” என்கிறார் ஹரி உத்ரா.

மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

விரைவில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

Read Previous

செருப்பை வைத்து ஒரு படம், ஆச்சரியப்படுத்தும் ஜெகன்நாத்

Read Next

திருட்டு விசிடி கட்டுப்படுத்த விஷால் புதிய அறிவிப்பு

Most Popular