நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சித் தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடலை டாக்டர். கிருதயா எழுதியிருக்கிறார். விழாவில், இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நம்ம விவசாயம் குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
பாடலையும், அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தையும் பார்த்து நம்மால் கலங்காமல் இருக்க முடியாது. விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற அனைவருமே முன் வர வேண்டும் என்பது பாடலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தோன்றும்.
“தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம்,” என்றார் நம்ம விவசாயம் ஷங்கர்.
பாடலை எழுதிய கிருதயா பேசுகையில், “விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலைகீழ். தஞ்சையில் இருந்த ஆறுகள் கூட இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை அழிக்க, அவர்களின் பொருளாதாரத்திற்கு அடித்தளமான விவசாயத்தை அழிக்க திட்டமிட்டது. விஷ விதைகளைத் தூவி நிலத்தை பாழ்படுத்தியது. அதை மீட்டெடுக்க ஃபிடல் காஸ்ட்ரோ பெரும் முயற்சி எடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோ செய்த பசுமை புரட்சி இங்கு கூடிய விரைவில் நிகழும். இந்த ஆல்பத்திற்கு இசையமைக்க இசைஞானி இளையராஜாவை அணுகினோம். 6 மாதம் அவருக்காக காத்திருந்தும் அவரின் தொடர் அலுவல்களால் அவரால் இசையமைக்க முடியவில்லை. உடனடியாக இளையராஜாவால் பாராட்டப்பட்ட சி.சத்யாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்தோம். அவரின் இசை தான் இந்த குறும்படத்திற்கு ஜீவன்,” என்றார்.
பாடலுக்கு இசையமைத்த சத்யா பேசுகையில், “விவசாயம் இப்போதிருக்கும் சூழலில் அதைப்பற்றிய செய்திகளை பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேனே தவிர, என்னால் எதையும் அதற்காக செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில் தான் நம்ம விவசாயம் பாடலுக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. நானும் ஒரு சிறு துரும்பாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை நானே பரிசோதித்துக் கொண்ட உணர்வு கிடைத்தது,” என்றார் சத்யா.
நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை நடிகரும், நாயகனுமான ஜீவா, “நம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய விஷயம். இங்கு திரையிடப்பட்ட குறும்படத்தை என்னால் ரசிக்க முடியவில்லை, இந்த உணர்வுபூர்வமான விஷயத்தை மனதால் உணர்கிறேன். விவசாயம், இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது. அது இணையத்தைத் தாண்டி வர வேண்டும். விவசாயத்தைத் தனியாகக் காப்பாற்ற முடியாது. ஒட்டு மொத்த அமைப்பும் மாறி, ஆட்சி மாற்றம் நடந்து, நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய்ச் சேர வேண்டும். விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றது. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள்,” என்றார்.
பாடலையும், காட்சித் தொகுப்பையும் இயக்கிய அன்பரசன் பேசுகையில், “அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப் பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். 65 நாட்கள், விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம். நல்ல நோக்கத்துக்காகச் செய்வதால் தனியாக எந்த ஒரு தொலைக்காட்சியையும் நாங்கள் அணுகவில்லை. இது மக்களை சென்று சேர வேண்டும் என்பதே முக்கிய நோக்கம்,” என்றார் இயக்குனர் அன்பரசன்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் சிவா பேசுகையில், “விவசாயிகளைக் காக்கச் சொந்த செலவில் ஒரு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள். விவசாயிகளைக் காப்பாற்றுகிறோம் என்பதை விட நம்மை நாம் காப்பாற்றிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. மிகப் பெரிய போராட்டத்தை இந்த அமைப்பு சந்திக்க வேண்டி இருக்கும், அதை மீறி இந்த நோக்கம் வெற்றி பெற வேண்டும்,” என்றார்
விழாவில் ஒளிப்பதிவாளர் மோகன், பாபு, இயக்குனர் சதீஷ், எடிட்டர் கேசவன், பாடகர் செந்தில் தாஸ், நடிகர்கள் பவுளி ஜெய்சன், பூங்கொடி, ராஜ், அர்ச்சனா, கோதண்டம், பேபி கோபிகா, பேபி ஷீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.