நாளை ‘ஸ்பைடர்’ டீசர், மகேஷ் பாபுவுக்கு ஒரு டெஸ்ட்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வெற்றி மூலம் பிரபாஸ், ராணா டகுபட்டி இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த நடிகர்களாகிவிட்டார்கள்.

முதல் பாகமாவது 75 நாட்கள் வரைதான் ஓடியது, இரண்டாவது பாகம் 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இனி, பிரபாஸ், ராணா நடித்து நேரடித் தமிழ்ப் படம் வராமல் டப்பிங் படம் வந்தால் கூட ஓரளவிற்கு வசூல் செய்துவிடலாம்.

பிரபாஸ், ராணா இருவரும் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகிய பிறகு, சென்னையிலேயே பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு பிரபலமாகவில்லை என்றால் எப்படி ?.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழில் நேரடியாக அறிமுகமாகிறார் மகேஷ் பாபு. இந்தப் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

இப்படத்தை ‘2.0’ படத்தைத் தயாரித்து வரும் லைக்கா புரொக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. சுமார் 25 கோடி வரை தமிழ் உரிமை வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், தமிழ் ரசிகர்கள் மகேஷ் பாபுவை இன்னும் தமிழ் பேசத் தெரிந்த நடிகர் என ஏற்றுக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

கடந்த வாரம் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தின் சிங்கிள் பாடலான ‘பூம் பூம்’ பாடல், தெலுங்கில் பெற்ற வரவேற்பில் பாதியைக் கூடத் தமிழில் பெறவில்லை. படத்தை ரசிகர்கள் டப்பிங் படமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடனேயே பார்க்கிறார்கள் போலிருக்கிறது.

இப்படம் இரு மொழிகளில் உருவாகியுள்ள படம்தான் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அந்த விதத்தில்தான் நாளை வெளியாக உள்ள டீசர் இருக்க வேண்டும். அப்போதுதான் ‘பாகுபலி 2’ படம் இங்கு பெற்ற வெற்றியில் பாதியையாவது பெற முடியும்.

‘ஸ்பைடர்’ டீசர் நாளை தெலுங்கில் ஒரு சென்சேஷனை ஏற்படுத்தப் போவது உறுதி, அது தமிழிலும் நடக்குமா என்பது மகேஷ் பாபுவுக்கு ஒரு டெஸ்ட்தான்.

அதை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தை இங்கு வெளியிடும் லைக்கா நிறுவனம் ஆகியோர்தான் செய்ய வேண்டும்.

Read Previous

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

Read Next

விஐபி 2, தங்கம், தரமணி – முந்தப் போவது எந்தப் படம் ?