கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’.
இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவாவும், கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானியும், முக்கிய கதாபாத்திரங்களில் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு மற்றும் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இப்படத்திற்காக இயக்குனர் கல்யாண் ஒரு பிரம்மாண்டமான பாடல் காட்சியை அமைக்க வேண்டும் என்று எண்ணிய பொழுது தொங்கும் தோட்டமான பாபிலோன் தோட்டத்தைப் போல வடிவமைக்கத் திட்டம் தீட்டினார்.
அதில் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று கலை இயக்குனர் கதிரிடம் ஆலோசித்த போது, கதிர் கார்கள் தொங்கும் ஒரு தோட்டத்தை மினியேச்சர் மூலம் அமைத்துக் கொடுத்து அனைவரையும் வியக்க வைத்தார். உடனே தயாரிப்பாளர் ராஜேஷ் கலை இயக்குனர் கதிரிடம் அதனை பிரம்மாண்டமாக வடிமைக்கச் சொன்னார். இதற்காக சென்னைக்கு அருகாமையில் உள்ள பத்து ஏக்கர் நிலத்தில், அரங்க பணியை 500க்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களைக் கொண்டு தொங்கும் கார்கள் தோட்டத்தை இருபத்தைந்து நாட்களில் உருவாக்கினார்கள்.
விவேக் – மெர்வினின் இசை அமைப்பில் துள்ளிக் குதிக்க வைக்கும் விதத்தில் உருவான இந்தப் பாடல் படத்தில் பிரபுதேவாவின் அறிமுகப் பாடலாக இடம் பெறுகிறது.
தெலுங்குத் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர் ஜானி இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ஜானியும் பிரபுதேவாவும் கலந்து ஆலோசித்து நடன அமைப்பில் பல புதுமையான வித்தைகளை பாடலில் புகுத்தியுள்ளனர்.
இப்பாடலுக்காக பத்து நாட்களுக்கு முன்பே மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த நானூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்து நடன ஒத்திகை அளிக்கப்பட்டது. மேலும் இப்பாடலை மெருகேற்ற மும்பை மாடல்களையும் வரவைத்துள்ளனர்.
ஆனந்த குமாரின் ஒளிப்பதிவில் மிகப் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்ட இப்பாடல் விஜய் வேலுக்குட்டியின் படத்தொகுப்பில் தயாராகிவருகிறது. மேலும் பாடல் காட்சிகளில் பிரமிக்க வைக்கும் ‘குலேபகாவலி’யின் சண்டைக் காட்சிகளிலும் புதுமை செய்ய படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெயின் அவர்களுடன் ஆலோசனை நடந்துவருகிறது.