தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழ்த் திரைப்பட இசையையையும், இந்திய இசையின் இனிமையையும் உலக அளவில் கொண்டு போய் சேர்த்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் எண்ணத்தில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’
தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை ஆராதித்து கொண்டாடுபவர்கள். அவர்களுக்கு கான்சர்ட் ஜேனர் என்ற புதுவகையான சினிமாவை ‘ஒன்ஹார்ட்’ படத்தின் மூலமாக அறிமுகப்படுத்துகிறார் ஏ.ஆர் ரஹ்மான்.
கான்சர்ட் ஜேனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படமே தான் கான்சர்ட் ஃபிலிம்.
ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக் கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன. இருப்பினும் மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் (This is it) என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக் கலைஞராக புகழ்பெற்று திகழும் ஏ.ஆர். ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் ஃபிலிம் தான் ஒன் ஹார்ட்.
ஏ ஆர் ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்டஇசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது பதினாறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பதினாறு இசை நிகழ்ச்சிகளையும் தொகுத்து ஒரே படமாக உருவாக்குவதின் முதல் முயற்சி தான் ஒன் ஹார்ட்.
இந்த படத்திற்கான ஒலிக் கலவை முழுவதும் டால்பி அட்மாசில் பதிவு செய்திருக்கிறார்கள். இதைக் கேட்ட டால்பி நிறுவனம், தாமே முன்வந்து இப்படத்திற்கு விளம்பரதாரராகியிருக்கிறது. அத்துடன் இப்படத்தின் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலியின் தரத்தையும் உலகளாவிய அளவில் பாராட்டி அங்கீகரித்திருக்கிறது.
இப்படத்தை கனடாவில் ப்ரீமியர் ஷோவாக திரையிடப்பட்டபோது ஏராளமான வரவேற்பும் பாராட்டும் கிடைத்திருக்கிறது. இந்த ஒன்ஹார்ட் படத்தில் பதினாறு பாடல்கள் இருந்தாலும் தமிழ் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.
இத்தகைய சிறப்பைப் பெற்ற ஒன் ஹார்ட் படம் உலகமெங்கும் விரைவில் வெளியாக இருக்கிறது.