இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் ‘பாடம்’.
இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் சொன்ன கருத்தை மையாமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக இந்த ‘பாடம்’ உருவாகியுள்ளது.
இந்த படத்தில் புதுமுகம் கார்த்திக் நாயகனாக நடிக்க, நாயகியாக மோனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர், மதுமிதா, யாசிகா, கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .
கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மனோ. ராஜசேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜிபின் பி.எஸ். தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. முக்கிய விருந்தினர்களாக இயக்குனர்கள் சீமான், அமீர், பாலாஜி மோகன், சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ், கவிஞர் பிறைசூடன், பொற்கோ, வேல் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த இசை விழாவில் பேசிய இயக்குனர் பாலாஜி மோகன்,
“ இன்றைய பள்ளிகளில் பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று தெரிந்து அவனுக்கு அந்த பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் கூறினார். அந்தக் கருத்தை சொல்ல வரும் இந்த பாடம் நிச்சயம் மாணவர்களை கவரும் என்பதில் ஐயம் இல்லை. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெறும்,” என்றார்.
இயக்குனர் சீனுராமசாமி பேசுகையில்,
“இன்றைய மாணவர்களின் கல்வி அவல நிலையைச் சொல்லும் படமாகத்தான் இந்தப் படத்தை நான் பார்க்கிறேன். காரணம் இன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் தயங்குகிறார்கள். காரணம் அவர்கள் எடையை விட அவர்களின் பள்ளிக்கூட புத்தக எடை அதிகமாக உள்ளது. அதோடு அவர்களின் எண்ணங்களுக்கு புறம்பாக உள்ளது. இதை மாற்றவேண்டும். இதை இந்த படம் நிச்சயமாக வலியுறுத்தும்,” என்றார்.
இயக்குனர் அமீர் பேசும் போது,
“இன்றைய சூழ்நிலையில் பிற மொழிகள் கற்க வேண்டும். காரணம் ஒரு உணவு விடுதிக்குச் சென்றால் அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியவில்லை. அதை விட இன்று தமிழில் நடிக்கும் நாயகிகளுக்குத் தமிழ் தெரியவில்லை. அவர்களிடம் பேசவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரிய வேண்டும் என்ற சூழ்நிலையி தான் உள்ளோம். அது மட்டும் இல்லாமல் உலகில் வேறு எங்கு செல்ல வேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரிய வேண்டிய சூழ்நிலை. ஆகவே தமிழ் மொழியை மூச்சாக வைப்போம், ஆங்கிலத்தைத் தேவைக்கு பயன்படுத்துவோம்,” என்றார்.
இயக்குனர் சீமான் பேசுகையில்,
“நாம் ஏன் பிற மொழிகளை கற்கவேண்டும். மற்றவர்களை நாம் தமிழ் படிக்க வைப்போம். அமெரிக்காவில் நான் தமிழில் தான் பேசினேன். எனக்கு மரியாதை கிடைத்தது எனவே நாம் அவர்களைத் தமிழ் பேச வைப்போம்,” என்றார்.