தமிழ் மக்கள் குடும்பத்துடன் அடிக்கடி படம் பார்க்கச் செல்வது அரிதாகிவிட்டது. அதற்குக் காரணம் டிக்கெட் விலை, டிக்கெட்டை விட அதிக பார்க்கிங் கட்டணம், அநியாய விலைக்கு விற்கப்படும்பாப்கார்ன், காபி, தண்ணீர், என பல விஷயங்களைச் சொல்லலாம்.
மூன்று பேர் கொண்ட நடுத்தரக் குடும்பம் படம் பார்க்கச் சென்றால் ஒரு படத்திற்கு சுமார் 1000 ரூபாய் வரை செலவாகிவிடும். இதனாலேயே கடந்த சில வருடங்களாக பலரும் தியேட்டர்களுக்குச் செல்வதை குறைத்துக் கொண்டனர்.
புதிய படங்களும் சில மாதங்கள், ஏன், சில வாரங்களுக்குள்ளாகவே ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ என டிவியில் ஒளிபரப்பாகும்.
சமீபத்தில் கேளிக்கை வரியை விதித்த அரசு, தொடர்ந்து டிக்கெட் கட்டணங்களையும் உயர்த்தியது. இதனால், டிக்கெட் விலை மேலும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே ஜுலை மாதத்தில் ஜிஎஸ்டி வரியால் அதிகமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தியேட்டர்காரர்கள் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகளை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார். அதன்படி,
1.இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:
2.இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்
3.கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்
4.அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்
5.தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்
6.பார்க்கிங் கட்டணம் வசூலிக்க கூடாது
7.விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும்
மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் உடனடியாக புகார் கொடுத்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இன்று அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை வைக்கப்பட உள்ளது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
திரையுலகத்தில் உள்ள முக்கிய சங்கமான தயாரிப்பாளர் சங்கமே தியேட்டர்காரர்களின் கொள்ளைகளுக்கு எதிராக அறிவிப்பு செய்துள்ளது பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.
இனிமேலும், தியேட்டர்காரர்கள் அப்படி அதிகப்படியான கட்டணங்களை வசூலிப்பதை, திருட்டு விசிடி, பைரசி ஆகியவற்றை எதிர்த்து நடவடிக்கை எடுப்பதைப் போல தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.