தமிழ்த் திரையுலகின் இந்தத் தலைமுறை இயக்குனராகக் கருதப்படுபவர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது இயக்கத்தில் நடித்துதான் அவரது தம்பி தனுஷ் சிறந்த நடிகராக மாறியுள்ளார்.
செல்வராகவன் இதற்கு முன் சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தை இயக்கியிருந்தார். இப்போது சூர்யாவையே இயக்க உள்ளார். இது பற்றிய அறிவிப்பு இதற்கு முன் வெளியிடப்பட்டிருந்தது. இருந்தாலும், அதன் பின் அது பற்றி எந்த விதமான தகவலும் வெளியாகாமல் இருந்தது.
சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து முடிக்க உள்ளார். இந்தப் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பின் சூர்யா, அடுத்து நடிக்கும் படமாக செல்வராகவன் இயக்கும் படம் அமைய உள்ளது. இது பற்றிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இன்று வெளியிட்டுள்ளார்.
2018 ஜனவரியில் ஆரம்பமாகும் படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
செல்வராகன் தற்போது சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தை இயக்கி வருகிறார். அவர் இயக்கி முடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பட வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது.
செல்வராகவன், சூர்யா கூட்டணியை சூர்யாவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.