வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க வெளிவந்த படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.
இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஒரு காவல் துறை அதிகாரியின் தீரமான செயலை பெருமையை வெளிப்படுத்திய படமாக நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
இருந்தாலும் படத்தில் சில குறிப்பிட்ட சமூகத்தினரை கொலை, கொள்ளை செய்பவர்கள் என சித்தருத்திருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்தது.
அது குறித்து ‘தீரன் அதிகாரிம் ஒன்று’ குழு சார்பாக வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “இந்தியாவின் பல மாநிலங்களில் நடந்த கொள்ளைச் சம்பவத்தை வைத்து மட்டுமே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தையும் தவறாக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் சித்தரிக்கவில்லை.
எந்த ஒரு சமுதாயமும் கொலை, கொள்ளையை குலத் தொழிலாகக் கொண்டு வாழவில்லை. அப்படி ஒரு சித்தரிப்பு இந்தப் படத்தில் காட்டப்படவில்லை. இருப்பினும் மக்கள் மனம் புண்படும்படி இருப்பதாகக் கருதுவதால் அதற்காக ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படக்குழு சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதோடு, வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இனிவரும், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் இணையதள ஒளிபரப்பு ஆகியவற்றிலிருந்து ‘குற்றப்பரம்பரை’ என்ற சொல் மற்றும் புத்தகக் காட்சி நீக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.