‘மாஸ்டர்’ ஓடிடி வெளியீட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்க அனிருத் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய படம் கொரானோ தொற்று காரணமாக தள்ளிப் போய்விட்டது. இப்படத்தின் வெளியீட்டை அனைவரும் எதிர்பார்த்துள்ள நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக நேற்று முதல் ஒரு பரபரப்பு நிலவியது.

தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, அதற்கும் ரசிகர்கள் வருவதில்லை ஆகிய காரணங்களால் மேலும் படத்தின் வெளியீட்டைத் தள்ளிப் போட முடியாத சூழலில் தயாரிப்பாளர் ஓடிடி ரிலீஸ் முடிவை எடுத்தாகச் சொன்னார்கள்.

இன்றும் தியேட்டர்காரர்கள் பலரும் ‘மாஸ்டர்’ தயாரிப்பாளரை அணுகி தியேட்டர்களில் படத்தை வெளியிடக் கேட்டுக் கொண்டார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவின.

இந்நிலையில் படத்தை தியேட்டர்களில் தான் வெளியிடப் போகிறோம் என படத்தின் தயாரிப்பாளர்களான லலித்குமார், சேவியர் பிரிட்டோ ஆகியோர் அறிவித்துள்ளனர்.

“இந்த பேரிடர் காலத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பீர்கள் என நம்புகிறோம்.

‘மாஸ்டர்’ படத்தைத் தியேட்டர்களில் பார்க்க ரசிகர்களுக்கு இருக்கும் மிகப் பெரும் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது.

உங்களைப் போலவே, அந்த ‘பெரிய நாள்’ வரும் என நாங்களும் காத்திருக்கிறோம்.

கடந்த சில நாட்களாக பல வதந்திகளை சுற்றி வரும் சூழலில், இதில் எங்களின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ஒரு பிரபல ஓடிடி நிறுவனத்திடமிருந்து எங்களுக்கு ஒரு சலுகை வந்தாலும், நாங்கள் தியேட்டர் வெளியீட்டைத்தான் விரும்புகிறோம். 

தற்போதைய சிக்கலான சூழலில் இந்தத் திரையுலகம் வாழ வேண்டிய சூழல் மிகவும் தேவையானது.

இந்த சமயத்தில் தமிழ்த் திரையுலகம் மீண்டு வர தியேட்டர் அதிபர்களும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் உங்களை சந்திப்போம் என்று நம்புகிறோம், பாதுகாப்பாக இருங்கள்,” என பத்திரிகைச் செய்தி மூலம் ‘மாஸ்டர்’ ஓடிடி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

‘மாஸ்டர்’ தயாரிப்பாளர்களின் இந்த அறிவிப்புக்கு தியேட்டர் அதிபர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Read Previous

கலர்ஸ் தமிழ் – ஜனவரி முதல் ‘சில்லுனு ஒரு காதல்’ புதிய தொடர்

Read Next

‘வாடி வாசல்’ வலம் வரும்…வாகை சூடும்.. – தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

Most Popular