‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாகாதது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.
சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. கேரளாவை விட தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கிறது.
தற்போது 150 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. அதிக வசூல் செய்த மலையாள படங்கள் பட்டியலில் 170 கோடி ரூபாய் வசூல் செய்து முதல் இடத்தில் ’2018’. இதற்குப் பிறகு 2-ம் இடத்தில் இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. விரைவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் முதல் படமாக அமையும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே, பெரும் அதிர்ச்சியாக ‘மஞ்ச்சும்மல் பாய்ஸ்’ படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாகவில்லை. நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் ஓடிடி விற்பனைக்கு சுமார் 20 கோடி ரூபாய் வரை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அவ்வளவு பணம் கொடுக்க எந்தவொரு ஓடிடி நிறுவனமும் முன்வரவில்லை.
10 கோடி ரூபாய் வரை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.