போட்டோகிராபர் இன்னைக்குதான் கிடைச்சிருப்பாரு….கஸ்தூரி கிண்டல்

தமிழ்நாட்டில் உள்ள சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பினிக்ஸ் காவல்துறையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு மரணம் அடைந்துள்ளது பற்றி தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா, உலகம் முழுவதும் மனித நேயத்தை விரும்பும் மக்களிடம் கொதிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களது மரணம் குறித்து பல தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள், நடிகைகள் அவர்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அரசியல் கட்சி ஆரம்பித்து முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ரஜினிகாந்த் எதுவுமே சொல்லாமல் இருந்தார்.

ஒரு வாரம் கழித்து இன்று டிவிட்டரில் அவர் கோபமாக இருக்கும் ஒரு புகைப்படத்துடன், “சத்தியமா விடவே கூடாது“ என்ற ஹேஷ்டேக்குடன் “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்துக் கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாகக் கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது,” என்ற பதிவிட்டிருந்தார்.

வழக்கம் போல ரஜினிகாந்த் டிவீட்டிற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அந்தத் துயர சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து ரஜினி தனது கண்டனத்தைப் பதிவு செய்திருப்பதற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

நடிகை கஸ்தூரி, “ஒருவேளை போட்டோகிராபர் இன்றுதான் கிடைத்திருக்கலாம்,” என கமெண்ட் செய்துள்ளார். 

எதற்காக ரஜினி கோபமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது கண்டனக் கருத்துடன் பதிவிட்டுள்ளார் என்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read Previous

ஜுலை 1ம் தேதி வெளிவந்த திரைப்படங்கள்

Read Next

ஜுலை 2 வெளிவந்த படங்கள்…

Most Popular