இந்தியத் திரையுலகத்தில் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் கே பாக்யராஜ்.
தமிழ் சினிமாவில் அவரது பல படங்கள் குறிப்பிடத்தக்க படங்களாகவும், வியாபார ரீதியில் பெரும் வெற்றி பெற்ற படங்களாகவும் அமைந்துள்ளது. அந்தக் காலத்தில் ரஜினி, கமல், ஆகியோருக்கு மத்தியில் தனக்கென பெண் ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருந்தவர். அவரது படங்கள் வெளிவந்தாலே போய்ச் சென்று பார்த்து கொண்டாடி ரசிகர்கள் இருந்தார்கள். அவர் திரையுலகில் வந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அவர் பேசுகையில்,
“அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. எனது நண்பர்கள், என் தாய் உட்பட அனைவரும் என்மீது நம்பிக்கை வைத்து, நான் சினிமாவில் நிச்சயம் வெற்றியடைவேன் என்று கூறினார்கள்.
16 வயதினிலே திரைப்படத்தில் எனக்கு முதல்முறை வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் கமல் அவர்கள் கூட, இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் பெரிய வாய்ப்புகள் கிடைத்தன, இதுவரை வேறு எந்தப் படத்திலும் இப்படி நிகழ்ந்ததில்லை என்று குறிப்பிட்டார்கள். வாய்ப்பு தேடும் நாட்களில் பலரிடம் எனது உண்மையான பெயரை கூறாமல் கோவை ராஜா என்று ஸ்டைலாக சொல்வேன். 16 வயதினிலே படத்தில் தான் எனது பெயரை பாக்யராஜ் என்று மாற்றினேன். என் அம்மா எனக்கு வைத்த பெயர் அதுதான். டைட்டில் கார்டில் பார்த்தபின் யார் இந்தப் பெயர் என்று எனது இயக்குநர் கேட்டார். பின்னர் அது நமது ராஜன் என்று அனைவரும் விளக்கினார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழக்கக்கூடாது என்பதால் கே.பாக்யராஜ் என்று வைத்துக்கொண்டேன்.
நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே பத்திரிகை நண்பர்கள் என்னைப்பற்றி எழுதியுள்ளீர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தில் எனது இயக்குநர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார். உதவி இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், பின்னர் நடிகர் என படிப்படியாக முன்னேறினேன்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் ஒரு கழுதையைக் கொண்டுவர வேண்டியிருந்தது. அப்போது நான் அதை ஏற்பாடு செய்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன. அதைப் பார்த்து என் குடும்பத்தினர் கழுதை இழுத்துவர சினிமாவுக்குப் போனாயா என்று கேலி செய்தனர். அந்த நேரத்தில் என் தாயார் உன் இயக்குநரே உன்னை ஹீரோவாக்கி படம் எடுப்பார் என்று கூறினார். பின்னர் அது நிஜமானது. ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே என் தாயார் மறைந்துவிட்டார். அது எனக்கு பெரும் துயரமாக இருந்தது.
முதல் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்திலே படத்தில் வில்லனாக நடித்தேன். அதன்பின் இயக்குநராக அறிமுகமானேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவுக்கு வருவதற்கு முன் சினிமா பார்க்கும் அனுபவம் மட்டுமே இருந்தது. சினிமா பற்றி வேறு ஒன்றும் தெரியாது. இங்கிருக்கும் இயக்குநர்களின் படங்களைப் பார்த்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். பின்னர் புத்தகங்களின் மீது அதிக ஈர்ப்பு உண்டானது.
சிறு வயதில் நான் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் என் தாயார் தேன் மிட்டாய் வாங்க பணம் கொடுப்பார். அதை அருகிலுள்ள கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கி உண்பேன். ஒரு நாள் பள்ளி முடிந்து வீடு வந்து பார்த்தேன், என் தாயார் இல்லை. உடனே பெட்டியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் அன்று இரவு தான் தெரிந்தது நான் கொடுத்தது பணம் இல்லை, தங்க மோதிரம் என்று. கடைக்காரர் விரும்பியிருந்தால் மோதிரத்தை வைத்துக்கொள்ளலாம். ஆனால் அவர் அதை என் தாயாரிடம் திருப்பிக்கொடுத்துவிட்டார். இந்த நிகழ்வு நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்தது.
எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்கு செய்யும் நன்மைகளைப் பார்த்து அவரது குணங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்தன. சிவாஜி அவர்களும் இயக்குநர் எவ்வளவு புதியவராக இருந்தாலும் அவருக்கு மரியாதை கொடுப்பார். இவை அனைத்தும் என் மனதில் இருந்தன. கமல் அவர்களின் நடிப்பை இளம் வயதில் பார்த்து வியந்தேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போலவே இன்றும் இருக்கிறார்.
பத்திரிகையாளர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர். ஒவ்வொரு படத்தையும் சிறப்பாக மக்களிடம் கொண்டுசேர்த்தனர். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பது இன்னும் எனக்கு வியப்பாகவே உள்ளது. அடுத்து ஒரு வெப் சீரிஸும், ஒரு திரைப்படமும் இயக்குவதற்கான பேச்சுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு பல புதிய முயற்சிகளை செய்ய தயாராக இருக்கிறேன். அனைவருக்கும் எனது உள்ளார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்.