தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு ஜாக்பாட் ஆகிவிட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’: என்ன காரணம்?

தமிழக திரையரங்க உரிமையாளர்களுக்கு ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் ஜாக்பாட் தான் என்கிறார்கள்

சிதம்பரம் இயக்கத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. கேரளாவில் பிப்ரவரி 22-ம் தேதி வெளியானது. தமிழ் பின்னணியில் நிகழும் கதை, ‘குணா’ படத்தில் வரும் குகை, கண்மணி அன்போடு பாடல் என முழுக்க தமிழக மக்கள் படமாக மாறிவிட்டது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’.

ஒட்டுமொத்த வசூலில் சுமார் 100 கோடி ரூபாயைத் தாண்டி விட்டது. தமிழகத்தில் அதிக வசூல் செய்த மலையாள படங்களில் முதல் இடத்தையும் பிடித்திருக்கிறது.

இந்தப் படத்தினை தமிழகத்தில் கோகுலம் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. முதலில் 25 திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டது. ஆனால், தொடர்ச்சியாக வந்த விமர்சனங்கள், மக்கள் மத்தியில் பரவிய பேச்சு என திரையரங்குகள் அதிகரிக்கத் தொடங்கியது.

முதல் வாரத்தில் 25 திரையரங்குகளில் இருந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம், மூன்றாவது வாரத்தில் சுமார் 350 திரையரங்குகளுக்கு நிகராக திரையிடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் மொத்த வசூலில் சுமார் 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களுக்கு இந்த ஆண்டின் முதல் ஜாக்பாட் படம் ’மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் தான். ஏனென்றால் வேற்று மொழி படம் என்பதால் முதல் வாரத்தில் 50 (திரையரங்க உரிமையாளர்) -50 (தயாரிப்பாளர்), 2-வது வாரத்தில் 60 (திரையரங்க உரிமையாளர்)-40 (தயாரிப்பாளர்), 3-வது வாரத்தில் 70 (திரையரங்க உரிமையாளர்) – 30 (தயாரிப்பாளர்) என்ற ரீதியில் தான் வசூலைப் பிரிப்பார்கள்.

அந்த வகையில் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் 3-வது வாரத்தில் தான் திரையரங்குகளே அதிகம். இதனால் ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களுக்கு இந்தப் படத்தின் வசூலில் 70% கிடைக்கும், அப்படியென்றால் இந்தப் படம் ஜாக்பாட் தான்.

இது போக திரையரங்கில் உள்ள கேன்டீன் வசூல், பார்க்கிங் வசூல் என கணக்கிட்டால் ஒட்டுமொத்த திரையரங்க உரிமையாளர்களுமே செம குஷியில் தான் இருக்கிறார்கள்.

இது தவிர, இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு எந்தவொரு திரையரங்க உரிமையாளரும் அட்வான்ஸ் தொகையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கார்த்தி?

Read Next

ஆர்.ஜே.பாலாஜிக்கு நோ சொன்ன விஜய்