ஆர்.ஜே.பாலாஜியின் கதைக்கு நோ சொல்லிவிட்டார் விஜய்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன் வெளியீடு எப்போது என்பதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
’கோட்’ படத்திற்குப் பிறகு டிவிவி நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதுவே தனது கடைசிப் படமாக இருக்கும் எனவும், அதற்குப் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார் விஜய். இதனால் விஜய்யின் கடைசி பட இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ், ஹெச்.வினோத், ஆர்.ஜே.பாலாஜி, அந்தோணி பாக்கியராஜ் உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுள்ளார் விஜய். ஆனால், எதையுமே ஒ.கே சொல்லவில்லை. இதில் கார்த்திக் சுப்புராஜ், ஆர்.ஜே.பாலாஜி இருவரில் ஒருவர் இயக்குநராக இருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியானது.
கடந்த வாரத்தில் விஜய் தரப்பிலிருந்து ஆர்.ஜே.பாலாஜியை அழைத்து, தங்களுடைய கதை இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வேறொரு தருணத்தில் சந்திப்போம் எனவும் கூறியிருக்கிறார்கள். இதனால் ஆர்.ஜே.பாலாஜி தான் நடிக்கவுள்ள அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார்.