அனைத்தையும் குறைச் சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது: தனுஷ் வேதனை

அனைத்தையும் குறைச் சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது என்று ‘கேப்டன் மில்லர்’ விழாவில் தனுஷ் வேதனையுடன் குறிப்பிட்டார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் விழா சென்னையில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது:

“சிறுதுளிப் பெருவெள்ளம் என்று சொல்வார்கள். அப்படி 2002-ம் ஆண்டிலிருந்து சிறுகச் சிறுக சேர்த்த துளிகள் எல்லாம் இன்று பெரிய வெள்ளமாக வந்துள்ளீர்கள். 

‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ படம் பற்றி நினைத்தவுடன் தோன்று விஷயம் உழைப்பு மட்டுமே. ஒரு அசுரத்தனமான உழைப்பு இந்தப் படத்திற்குள் இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

‘You’ll be the devil, I’m the devil’ – அப்படி ஒரு மிருகத்தனமான உழைப்புக்குச் சொந்தக்காரர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அவருடைய உழைப்பு மற்றும் படக்குழுவினரின் உழைப்பைப் பார்க்கும் போது நானும் கஷ்டப்பட்டேன் என்று சொல்வதற்கு கூச்சமாக உள்ளது. 

அவரைப் பார்க்கும் போது எனக்கு வெற்றிமாறனை ஞாபகப்படுத்துகிறார்.’கேப்டன் மில்லர்’ படத்தின் கதையை 15 நிமிடங்கள் சொன்னார். படம் பெரிய பட்ஜெட்டில் இருந்தது. ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாம் செய்துவிட முடியுமா என்று கேட்டதற்கு ‘ம்ம்ம்ம்’ எனச் சொன்னார். 

இப்போது நான் படம் பார்த்துவிட்டேன். இது சம்பவம் பண்ற கை என்று தெரிந்துவிட்டது. இந்தப் படம் மூலமாக அவருக்கு ஒரு பெரிய பெயர் கிடைக்கும். இதே அரங்கில் அவருக்கு கரவொலிகள் எழும்பும்.

‘பொல்லாதவன்’ படத்துக்காக ஒரு இசையமைப்பாளரிடம் சென்று கதை சொன்னோம். அவர் கதையில் நிறைய மாற்றாங்கள் சொன்னார். கதையில் மாற்றம் செய்வதில் எனக்கு விருப்பமில்லை என்று வெளியே வந்தவுடன் வெற்றிமாறன் சொன்னார். 

அப்படியென்றால் இசையமைப்பாளரை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்து, உள்ளே வந்தவர் தான் ஜி.வி.

‘உருகுதே மருகுதே’ பாடல் கேட்டுத்தான், அவரை ‘பொல்லாதவன்’ படத்துக்கு ஒப்பந்தம் செய்தோம். எப்போது போன் பண்ணாலும் “சொல்லு மச்சான்” என்று சொல்வார். அவர், இவர் என்று சபை நாகரீகம் கருதி வெளியே பேசிக் கொள்வோம்.

சிவராஜ்குமார் சாருடைய பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்கள் ‘ஜெயிலர்’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் நடந்து வரும் போதே, தமிழ்நாட்டு மக்களின் மனதின் உள்ளே வந்துவிட்டீர்கள் சார். உங்களுடைய சிரிப்பில் உங்களது அப்பாவும், தம்பியும் தெரியுறார்கள். அப்பாவின் பெயரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று உங்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். 

என் பசங்க இங்கு இருக்கிறார்கள், அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.’கேப்டன் மில்லர்’ படத்தின் கடைசி 30 நிமிடங்கள் ரொம்ப திருப்தியாக இருந்தது. அதே தான் உங்களுக்குத் தோன்றும் என்று நினைக்கிறேன். 

கேப்டன் மில்லர் படத்தின் டேக் லைன் என்னவென்றால் ‘Respect is freedom’.இங்கு யாருக்கு சுதந்திரம், மரியாதை இருக்கிறது என்று தெரியவில்லை. எதைச் சொன்னாலும் யோசித்து யோசித்து பேச வேண்டியதிருக்கிறது. 

எதைச் செய்தாலும் யோசித்து யோசித்து செய்ய வேண்டியதிருக்கிறது. ஏனென்றால், அனைத்தையும் குறைச் சொல்ல ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

‘கேப்டன் மில்லர்’ ஒரு சர்வதேசப் படமாக இருக்கும். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் ஒரு பெரிய விஷயம் செய்திருக்கிறார்” இவ்வாறு தனுஷ் பேசினார்.

Read Previous

தயாராகிறது ‘மாயாண்டி குடும்பத்தார் 2’

Read Next

2023-ம் ஆண்டு இந்தி திரையுலகில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய ஷாரூக்கான்.