மீண்டும் தானே ஒரு படம் இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.
‘ராயன்’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குபேரா’ உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இதில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தில் இயக்குநர் மற்றும் தயாரிப்பு பொறுப்பினை மட்டுமே ஏற்றிருக்கிறார். ‘ராயன்’ படத்தினை இயக்கி, நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மூன்று படங்களையும் முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தில் நடிக்க முடிவு செய்திருந்தார் தனுஷ். ஆனால், விஜய் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத். இதனால் அந்தப் படத்திற்கு ஒதுக்கிய தேதிகள் வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்வதற்கு, மீண்டும் தானே இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார் தனுஷ். இதற்கான கதையினை முடிவு செய்து, திரைக்கதை பணிகளை நேரம் கிடைக்கும் போது கவனித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தினையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கலாம் என்று பேச்சுகள் அடிபடுகிறது.