லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘தர்பார்’.
2020 ஜனவரி மாதத் துவக்கத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு டிரைலர் வெளியீட்டிற்குப் பிறகு அதிகமாகியுள்ளது.
விஜயகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த ஏஆர் முருகதாஸ், முதல் முறையாக ரஜினிகாந்த் படத்தை இயக்குகிறார்.
‘தர்பார்’ படத்தின் கதையில் எந்த விஷயம் ரஜினிகாந்தை ஈர்த்து நடிக்க வைத்தது என்பது பற்றி அவர் கூறுகையில்,
“ரஜினி சார் வச்சி படம் பண்ணணும்னு ஆரம்ப காலத்திலேயே ஆசை இருந்தது. அது தள்ளி போய்க் கொண்டே இருந்தது. இந்த முறை அப்படி ஒரு விஷயம் அமைஞ்ச பிறகு இந்த முறை கண்டிப்பா நடந்துடணும்னு நினைச்சேன். ரொம்ப பொறுப்பாக உட்கார்ந்து எழுதி முடிச்சேன்.
ரஜினி சார் படம்னு சொன்னாலே, அவரோட படங்கள்ல இருக்கிற கதைகள்ல ஒரு பார்முலா இருக்கும். அந்த மாதிரி ஒரு விஷயம் இந்தப் படத்துல இருக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணேன்.
போலீஸ் கதைன்னு சொன்ன உடனே ரஜினி சாருக்கு பிடிச்சிப் போச்சி. ‘மூன்று முகம்’ படத்துல வந்த அலெக்ஸ் பாண்டியன் மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை படம் முழுக்க வைக்கலாம் சார்னு சொன்னேன். அந்த ஒரு விஷயம் அவருக்கு ரொம்ப பிடிச்சுது. அப்புறம் அதை டெவலப் பண்ணுங்கன்னு சொன்னாரு.
‘பாட்ஷா, பெத்தராயுடு’ படம்தான் ரஜினி சாருக்கு தெலுங்கு மார்க்கெட்ல பெரிய அளவுல ஓபனாச்சி. 100 படங்களுக்கு அப்புறம்தான் அவருக்கு அப்படி ஒரு மார்க்கெட் கிடைச்சது.
ஹிந்தில ‘2.0’ படம்லாம் அவரை வேற ஒரு லெவலுக்கு கொண்டு போச்சி. வெளிநாடுகள்ல அவருக்கு பெரிய ஒரு வரவேற்பு இருக்கு.
இப்ப ரஜினி சார் படம்னு சொன்னலே அது ‘பான் இந்தியா’ படமா மாறிடுச்சி. அதுக்கேத்தபடி படத்துல மும்பையை கதைக்களமா இருக்கிறதும் ஹிந்திலயும் பொருத்தமா இருக்கும்.
ஏன், மும்பைன்னா, ‘துப்பாக்கி’ படத்தை மும்பையில எடுத்த போது எனக்கு நிறைய புது லொகேஷன்ல எடுக்க முடிஞ்சது. அது விஷுவலா வேற ஒரு தளத்துல அமைஞ்சது. தமிழ் சினிமாவுல அதிகம் பார்க்காத புதுப்புது இடங்களை காட்ட முடிஞ்சுது.
அதனாதான், ‘தர்பார்’ படத்தையும் மும்பையிலயே படமாக்கினோம். இப்ப டிரைலரை தமிழ் ரசிகர்கள் பார்த்ததை விட ஹிந்தி ரசிகர்கள் அதிகமா பார்த்திருக்காங்க. ஹிந்திலயும் பெரிய வரவேற்பைப் பெறணும்கறத டார்கெட்டா வச்சி பண்ணோம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுக்க உள்ள ரஜினி ரசிகர்களுக்கான எதிர்பார்ப்புள்ள படமா அவ்வளவு சீன்கள் படத்துல இருக்கு,” என்கிறார் முருகதாஸ்.