தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் போட்டி போட்டு பல வெற்றிப் படங்களையும், 100 நாள் 200 நாள் படங்களையும் கொடுத்தவர் சரத்குமார்.
தற்போது மீண்டும் அதிகமான படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் அரசியல், மறுபக்கம் சினிமா என தனது பயணத்தைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து தனது திரையுலகப் பயணம், அரசியல் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
“தற்போது ‘வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தநாள் பராசக்தி, பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். 20 ஆண்டுகள் கழித்து ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் ராதிகாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்.
‘பிறந்தநாள் பராசக்தி’ படத்தில் நான், ராதிகா, வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளோம். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.
வரலட்சுமி தற்போது விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு பெருமைதான். ஆனால், அவரின் அப்பாவாக அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். நான் நினைத்திருந்தால் அவர் அறிமுகமான கால கட்டத்திலிருந்து அவருக்கு உதவி செய்து அவரை ஒரு பெரிய இடத்திற்குக் கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யத் தவறிவிட்டேன். ஆனால், அவராகவே முயற்சி செய்து இப்போது உயர்ந்திருக்கிறார்.
நடிகர் சங்கத்தில் தனி அதிகாரி வந்து நிர்வாகத்தைப் பார்ப்பதற்குக் காரணம் ஒற்றுமை இல்லாததுதான். கட்டிடம் சீக்கிரம் முடிவடைய வேண்டும் என்பதில் எனக்கும் ஆசைதான். அங்கு பல திருமணங்கள் நடைபெற வேண்டி உள்ளது. நான், ராதாரவி ஆகியோர் சங்க வளர்ச்சிக்காக எவ்வளவோ செய்திருக்கிறோம். ஆனால், எங்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் சதி செய்தனர். அதற்கு மீடியாக்களும் துணை போனது.
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அரசியலில் நுழைந்து விட்டு அதன் பின் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்றால் டிவிஷன் மேட்ச் எல்லாம் ஆடிவிட்டுத்தான் வர வேண்டும். நேரடியாக இந்திய அணிக்குத்தான் செல்வேன் என்றால் அது சரியில்லை.
இங்கு நல்லாட்சிதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எந்த வெற்றிடமும் இங்கு இல்லை.
நான் சினிமாவில் நடித்து சம்பாதித்தால்தான் அரசியல் கட்சி நடத்த முடியும். கட்சி நடத்த பணம் வேண்டுமே.
அடுத்து வெப் சீரிஸ்களிலும் நடிக்க உள்ளேன். தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் அவை தவிர்க்க முடியாதது. ஒரு பெரிய நிறுவனம் வெப் சீரிசில் என்னை நடிக்க கேட்டுள்ளார்கள். விரைவில் அது ஆரம்பமாகும்.
சினிமாவில் தற்போது சரியான கதைகள் அதிகம் வருவதில்லை. அதற்காக இயக்குனர்கள் சேரன், வெங்கடேஷ், இளவரசன், நான் ஆகியோர் ஒரு குழுவாக பல கதைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
தமிழ் நடிகர்களுக்கு மற்ற மொழிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுவதில்லை. மலையாளத்தில் சில படங்களில் நடித்தேன். ஆனால், தொடர்ந்து யாரும் அங்கு வேற்று மொழி நடிகர்களை பயன்படுத்துவதில்லை.
தமிழ்நாட்டில் மட்டும்தான் எந்த மொழி நடிகர்களும் வந்து நடிக்கும் அளவிற்கு நாம் வரவேற்பு கொடுத்துக் கொண்டிருக்கிறோம்,” என்றார் சரத்குமார்.