செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’.
ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக படக்குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பிரமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று திருச்சி செண்ட்ஜோசப் கல்லூரியில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர்.
இவ்விழாவினில் நடிகை மீனாட்சி பேசுகையில்,
விக்ரம் சாரைப் பொறுத்தவரை ஒவ்வொரு படத்திலும் அவரது முழு உழைப்பைத் தருவார். நாமெல்லாம் சில வருடம் ஒரே விசயத்தை செய்தால் சலிப்பாகிவிடுவோம். ஆனால் அவர் 61 வது படத்திலும் முதல் படம் போல் உழைக்கிறார். அது அவரிடத்தில் மிகவும் பிடிக்கும்.
நடிகை மிருணாளினி பேசுகையில்,
முதலில் விக்ரம் சாருடன் நடிப்பதை என்னால் நம்பமுடியவில்லை. அவரது படங்களை தியேட்டரில் ரசிகையாக பார்த்து ரசித்திருக்கிறேன். அவருடனே நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை. மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இப்படம் உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்.
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில்,
தமிழில் எனக்கு முதல் படம், படத்திற்காக நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகச் சிறப்பான படைப்பாக வந்துள்ளது. உஙகள் அனைவருக்கும் பிடிக்கும்.
நடிகர் விக்ரம் பேசுகையில்,
நான் திருச்சிக்கு சிறு வயதில் வந்திருக்கிறேன். நிறைய சுத்தியிருக்கிறேன். அப்போதே செயின்ட் ஜோசப் கல்லூரி பிடிக்கும். இக்கல்லூரியில் நீங்கள் படிப்பது பெருமை. ’கோப்ரா’ படத்தைப் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. உங்களுக்கு ‘அந்நியன்’ பிடிக்குமெனில் அது இதில் இருக்கிறது. அதைத் தாண்டி சயின்ஸ் ஃபிக்சன் இருக்கிறது. எமோஷன், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். அஜய் ஞானமுத்துவின் முதல் இரண்டு படங்களும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் இந்தப் படத்தையும் மிக வித்தியாசமாகச் செய்துள்ளார். படம் மிக ப்ரெஷ்ஷான படமாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் படம் வருகிறது. உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
நிகழ்ச்சியின் முடிவில் கல்லூரி மாணவர்கள் இணைந்து விக்ரம் உருவப்படம் வரைந்த பெயிண்டிங்கை அவருக்குப் பரிசாக அளித்தார்கள்.