செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரிப்பில் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘கோப்ரா’.
ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக படக்குழுவினர் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் பிரமோஷன் செய்ய ஆரம்பித்துள்ளனர். இன்று திருச்சியில் ஆரம்பமான நிகழ்ச்சி அடுத்து மதுரையில் நடைபெற்றது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு விக்ரம் பேசுகையில்,
“மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது, உங்கள் அன்பு தான் காரணம். இங்கு நீங்கள் தரும் அன்பு பிரமிப்பு தருகிறது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர், அவர் இயக்கியுள்ள படம். அவரால் பட வேலைகளால் வர முடியவில்லை. இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார். மதுரையில் தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா, அமீர் எல்லாம் இங்கு தான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார். இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். கோப்ராவிற்கு வருவோம். கோப்ரா படத்தைப் பொறுத்தவரையில் நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன், காமெடி, ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும். படத்தை எல்லோரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி,” என்றார்.