ஹாலிவுட் படங்களின் பிரமிப்பைத் தரும் ‘கோப்ரா’ – விக்ரம்

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில்,  விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கோப்ரா’.

இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று தியேட்டர்களில் வெளியாகிறது.  படத்தை ரசிகர்களிடம் பிரபலப்படுத்துவதற்காக விக்ரம், படத்தில் நடித்துள்ள நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் ஹைதராபாத்திற்குச் சென்று அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் திருப்பதி பிரசாத்தும் உடன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் திருப்பதி பிரசாத் பேசுகையில், 

''கொரோனா’ தொற்று காலகட்டத்தில் ரஷிய நாட்டில் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் குளிரில் 35 நாட்கள் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பிறகும் முழுமையான பாதுகாப்புடன் ரஷியாவில் மீண்டும் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது போன்ற கதாபாத்திரங்களில் தென்னிந்தியாவிலேயே விக்ரம் ஒருவரால் தான் ஏற்று நடிக்க இயலும். 

இந்தியாவிலேயே கமல்ஹாசனுக்கு அடுத்து உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் விக்ரம் தன்னிகரற்றவராகத் திகழ்கிறார். கோப்ரா திரைப்படம் வித்தியாசமான கதை. திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் கூட்டணியுடன் உருவாகி இருக்கிறது. இந்தியாவின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளரான ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். ‘புஷ்பா’ இயக்குநர் சுகுமார் நிகழ்த்திய மாயாஜாலத்தை போல், இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் ‘கோப்ரா’ படத்தில் மாயாஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். 

கொல்கத்தா, ஆலப்புழா, சென்னை, ரஷியா எனப் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் கடுமையாக உழைத்து கோப்ரா படத்தை நிறைவு செய்திருக்கிறார்கள். விக்ரமின் கலை உலகப் பயணத்தில் இந்த கோப்ரா மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக அமையும். ‘கோப்ரா’ திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தெலுங்கிலும் வெளியாகிறது. இதற்கு ரசிகர்கள் பேராதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.

விக்ரம் பேசுகையில், 

''கோப்ரா’ படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவால் இங்கு வர இயலவில்லை. படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார். எனக்கும் தெலுங்கு ரசிகர்களுக்கும் இடையே எப்போதும் ஒரு பாசம் மிகுந்த பந்தம் இருக்கிறது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இந்தக் கதையை விவரிக்கும் போது உடனே நடிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்குரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

ரஷியாவில் நடைபெற்ற படப்பிடிப்பு கொரோனா காலகட்டத்தில் முழுமையான பாதுகாப்புடன் நடைபெற்றாலும், அங்கு ஐந்து வெவ்வேறு கெட்டப்புகளில் நடிக்க வேண்டியதிருந்தது. அதற்கான ஒப்பனை, குளிர் இதனைக் கடந்து தான் நடித்தேன். எனக்கு இவை அனைத்தும் எளிதாக இருந்தது. ஒவ்வொரு கெட்டப்பிற்கும் ஒவ்வொரு உடல் மொழி. அது எனக்கு சவாலானதாக இருந்ததால், மகிழ்ச்சியுடன் பணியாற்ற முடிந்தது.

கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லராகவும், எமோஷனல் டிராமாவாகவும், சயின்ஸ் ஃபிக்சனாகவும், ஆக்சன் என்டர்டெய்னராகவும் கலந்து உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் எனக்கும் நடிகை ஸ்ரீநிதிக்குமிடையே அற்புதமான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ரொமான்ஸ் காட்சிகள் இருந்தாலும் அவர் அதிலும் தன் முத்திரையை பதித்திருக்கிறார். மீனாட்சி இந்த படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாகவும், கணித புதிர்களை விடுவிப்பதில் உதவி செய்பவராகவும் தோன்றுகிறார். அவருடைய கதாபாத்திரமும் மிகவும் சுவாரசியமானது. மிருணாளினி ரவிக்கு என்னை காதலிக்கும் கதாபாத்திரம். உணர்வு பூர்வமான இந்த வேடத்தை அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் படங்களைப் பார்த்த பிரமிப்பு ஏற்படும். இந்த படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கதை, காதல், நகைச்சுவை, சண்டைக் காட்சி, சென்டிமென்ட் என அனைத்தும் இடம் பெற்றிருக்கிறது.

மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ வில்லனாக நடித்திருக்கிறார். கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முதன் முதலாக நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் போது உங்களை ஆச்சரியப்பட வைப்பார். இதன் பின்னணியில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் பங்களிப்பு அதிகம்.

நாங்கள் எங்களுடைய சிறந்த உழைப்பை வழங்கியிருக்கிறோம். தெலுங்கு ரசிகர்களுக்கு கோப்ரா படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சிறந்த படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் என்றைக்கும் ஆதரவு அளித்திருக்கிறார்கள். கோப்ரா திரைப்படம் உலக அளவில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படைப்பாக உருவாகி இருக்கிறது.

நம் தேசத்தில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற தற்போது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவான  திரைப்படங்களின் தேவை ஏற்பட்டிருக்கிறது. இவையனைத்தும் கோப்ரா படத்திலும் இருக்கிறது.

என் நடிப்பில் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் போது நடிகை மியா ஜார்ஜ் சிங்கிளாக இருந்தார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு திருமணம் நடைபெற்றது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பின் போது அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்விற்காக கொச்சிக்கு சென்ற போது, அவருக்கு ஐந்து மாத குழந்தை இருந்தது. இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. கோப்ரா திரைப்படத்தை விரைவில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயமும் உருவானது. ஆனால் திரையில் மியா ஜார்ஜ் தன்னுடைய அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

கோப்ரா போன்ற பிரம்மாண்டமான படைப்பை தெலுங்கு ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்றால், அதற்கு திருப்பதி பிரசாத் தான் பொருத்தமானவர் என அவரைத் தேர்ந்தெடுத்தோம். அவரும் மனமுவந்து எங்களது வேண்டுகோளை ஏற்று கோப்ரா படத்தை தெலுங்கில் வழங்குகிறார்.'' என்றார்.

 

Read Previous

பெங்களூரூவில் ரசிகர்களை சந்தித்த ‘கோப்ரா’ படக்குழுவினர்

Read Next

நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுவா