சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ படத்தின் கதைக்களம் என்னவென்று வெளியாகியுள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அயலான்’.
கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.நீண்ட வருடங்களாக தயாரிப்பிலுள்ள இந்தப் படம் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்று (ஜனவரி 5) ட்ரெய்லர் வெளியாகவுள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் கதைக்களம் என்னவென்பது முதன் முதலாக தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் படத்தின் தணிக்கையின் போது, கதைக்களம் என்னவென்பதை தெரிவிக்க வேண்டும்.
அதில் ‘அயலான்’ படக்குழுவினர் கூறியிருப்பதாவது:“இந்த சுற்றுச்சூழல் சார்ந்த த்ரில்லரில், தமிழ் ஒரு போராட்ட குணம் கொண்டவன்.
இயற்கைப் போராளி. வேற்றுகிரகவாசி எதிர்பாராத விதமாக பூமிக்கு வந்திறங்குவதால் அவனது திட்டங்கள் பாழாகின்றன. தன் நண்பர்கள் குழுவுடன் இணைந்து, பூமியின் வளங்களை சுரண்டும் ஒரு இரக்கமற்ற தொழிலதிபரை எதிர்க்க ஆரம்பிக்கிறான்.
பூமியின் தலையெழுத்து நாயகன் மற்றும் அவன் நண்பர்களின் கைகளில் இருக்கிறது. தடைகளைத் தாண்டி கிரகத்தின் உயிர்நாடியை அவர்களால் பாதுகாக்க முடியுமா?”இவ்வாறு படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தப் படம் தமிழ்நாட்டில் தணிக்கைச் செய்யப்பட்டு ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.