அறிவழகன், அருண் விஜய் முதன் முறையாக இணைந்த ‘குற்றம் 23’ படம் 2017ம் ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
அந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்திருக்கிறது.
ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் புதிய படத்தில் இருவரும் இணைய உள்ளார்கள்.
படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களை இயக்குனர் அறிவழகன் தற்போது தேர்வு செய்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளதாம்.
இந்தப் புதிய படம் பற்றி அறிவழகன் கூறுகையில்,
“குற்றம் 23′ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ்த் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இந்தப் படத்தை இயக்க இருக்கிறேன்.
எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும், அது கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா கதாநாயகியாக நடிக்க உள்ளார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது,” என்றார்.
சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். ‘ஆர்யா 2, ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்குப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து ராஜசேகர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.