கொரானோ தொற்று பரவல், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அண்ணாத்த’.

கொரானோ தொற்று பரவ ஆரம்பிப்பதற்கு முன்பு இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. கொரானோ பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மீண்டும் ஹைதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வந்தது.

படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் துணையுடன் தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த். அங்கு அவருக்கென பிரத்யேக பயோ பபுள் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவரை யாரும் எளிதில் நெருங்க முடியாதவாறு பாதுகாத்து வந்தனர்.

இந்நிலையில் வழக்கமாகச் செய்யும் பரிசோதனையில் படக்குழுவில் இருந்த நான்கு பேருக்கு கொரானோ தொற்று பரவியுள்ளது. மற்ற படக்குழுவினர் கொரானோ தொற்று பரிசோதனை மேற்கொண்டதில் அனைவருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது.

இருப்பினும் அதிக பாதுகாப்பு கருதி தற்போதைக்கு ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை ரத்து செய்து, தள்ளி வைத்துவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் டிவிட்டர் மூலம் தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அவர் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Read Previous

டிசம்பர் 23ம் தேதியில் வெளியான படங்கள்…

Read Next

14 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் கூட்டணி

Most Popular