மகளிர் மட்டும் விமர்சனம்

தமிழ் சினிமாவில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வருடத்திற்கு ஒன்றிரண்டு வந்தால் பெரிது. நாயகர்களைச் சுற்றியேதான் திரைப்பட உலகமும் பெரும்பாலும் நகர்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதாவது ஒரு முறைதான் நாயகர்கள் இல்லாமல் நாயகிகள் மட்டுமே கோலோச்சும் படங்கள் வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ என்ற மலையாளப் பட ரீமேக்கில்தான் நடித்தார். மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இந்த ‘மகளிர் மட்டும்’ படத்தில் ஒரு நேரடிக் கதையில் நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் தயாரித்து 23 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ படத்திற்கும் இந்தப் படத்திற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டு படங்களிலும் நாசர், ஊர்வசி நடித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இயக்குனர் பிரம்மா இன்றைய காலகட்டத்திற்கேற்ப ஒரு புதுமையான கதையை எழுதியதற்காகத் தனியாகப் பாராட்டலாம். அதையும் கலகலப்பாக சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார்.

தொலைக்காட்சிகளுக்கு டாகுமென்டரி படங்களை எடுத்துத் தருபவர் ஜோதிகா. காதலன் வெளிநாடு போய்விட்டதால் அவருடைய வருங்கால மாமியார் ஊர்வசி வீட்டிற்கே வந்து தங்குகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஊர்வசியின் 39 வருடத்திற்கு முந்தைய பள்ளிப் பருவ விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். ஊர்வசியின் நெருங்கிய தோழிகளான சரண்யா, பானுப்ரியா ஆகிய இருவரையும் தேடிக் கண்டுபிடித்து சந்திக்க வைக்க முயற்சிக்கிறார். ஊர்வசிக்காக ஒரு ஃபேஸ்புக் கணக்கை ஆரம்பித்து, அதன் மூலம் சரண்யா, பானுப்ரியாவைக் கண்டுபிடிக்கிறார். அவர்களுடைய தற்போதைய வாழ்க்கையிலிருந்து அவர்களை விடுவிடுத்து மூன்று நாட்கள் மகிழ்ச்சியாக இருக்க அவர்களை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். அந்தப் பயணங்களும், அதன் சுவாரசியங்களும், திருப்பங்களும்தான் ‘மகளிர் மட்டும்’.

ஜோதிகாவிற்காக கதையை எழுதினார்களா அல்லது எழுதிய கதையில் ஜோதிகா அவ்வளவு பொருத்தமாக நடித்திருக்கிறாரா என்பது ஆச்சரியமாக உள்ளது. கதாநாயகியாக நடித்த போது எவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தாரோ அதே போல இப்போதும் இருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் ஜோதிகாவைத் தவிர வேறு யாரும் அவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பது பழைய வாக்கியம்தான் என்றாலும், அதுதான் உண்மையும் கூட. சொந்தக் குரலில் அவரது பேச்சைக் கேட்பது அந்தக் கதாபாத்திரத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது.

ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா ஆகிய மூவரில் அசால்ட்டாக ஸ்கோர் செய்பவர் ஊர்வசி மட்டுமே. பானுப்ரியாவைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சரண்யா வழக்கம் போலவே யதார்த்தமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

பானுப்ரியாவின் மகனாக பாவல், வட நாட்டில் செட்டில் ஆன இளைஞர் கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். யதார்த்தமாக நடிக்கிறேன் என நாசர், மூக்கை நோண்டிக் கொண்டு நடிப்பதெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. சரண்யாவின் கணவராக லிவிங்ஸ்டன், அவர் தண்ணி அடிக்கும் ஸ்டைலுக்கு அப்படி ஒரு கைதட்டல். எதிர்பாராத கேமியோ கதாபாத்திரத்தில் மாதவன்.

ஊர்வசிக்கு புதிதாக ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பித்துக் கொடுக்கிறார் ஜோதிகா. ஊர்வசிக்கு முன்னதாகவே பானுப்ரியா, சரண்யா ஃபேஸ்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஆக்ராவில் கட்டுப்பாடுள்ள குடும்பத்தில் இருக்கிறார் பானுப்ரியா, அப்படியிருக்க அவருக்கு ஏற்கெனவே ஃபேஸ்புக் கணக்கு இருப்பதெல்லாம் ரொம்ப ஓவர். ஃபேஸ்புக் இல்லாமல் வேறு வழியில் தோழிகள் மூவரையும் மீண்டும் சந்திக்க வைத்திருந்தால் இன்னும் யதார்த்தமாக இருந்திருக்கும்.

இடைவேளை வரை திரைக்கதை சற்றே தடுமாறுகிறது, தோழிகள் மூவரும் கிளம்பிய பிறகுதான் வேகமெடுத்து பயணிக்கிறது.

ஜிப்ரான் இசையமைப்பில் ‘அடி வாடி திமிரா..’ பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே ரகம்தான்.

படம் பார்த்துவிட்டு வெளியில் வரும் நடுத்தர வயதுக்காரர்கள் மீண்டும் அவர்களது பள்ளித் தோழர்கள், தோழிகளைத் தேட வேண்டும் என்று நினைத்தால் அது படத்திற்குக் கிடைத்த வெற்றி.

Read Previous

துப்பறிவாளன் விமர்சனம்

Read Next

‘மாணிக்’ முதல் பார்வையை வெளியிட்ட விஷால்