தமிழ் சினிமாவில் கமர்ஷியல் படங்கள் என்றாலே வழக்கமாக ஹீரோக்களின் ஆக்ஷனை மையப்படுத்திய படங்கள்தான் அதிகம் வரும். உடல் ரீதியான அவர்களுடைய அடிதடிகளைத்தான் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி ஒரு ஹீரோவின் திறமையை வெளிப்படுத்தும் கமர்ஷியல் படங்கள் வருவது மிகவும் குறைவுதான். அந்தக் குறையை இந்த ‘துப்பறிவாளன்’ படம் போக்கியிருக்கிறது.
முதலில் படத்தின் நாயகன் விஷாலுக்கு கணியன் பூங்குன்றன் என்ற அழகான பெயரை வைத்ததற்கு இயக்குனர் மிஷ்கினை முதலில் பாராட்ட வேண்டும். விஷாலை மற்றவர்கள் அப்படி கூப்பிடுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. தமிழ்ப் பற்றை பேச்சில் மட்டும் காட்டாமல் செயலிலும் காட்ட இயக்குனர்கள் முன் வரவேண்டும் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
விஷால், ஒரு துப்பறியும் நிபுணர். பொதுவாக தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்துபவர்கள் பெரும்பாலும் திருமணத்திற்காக பெண்கள், ஆண்கள் ஆகியோரை வேவு பார்த்து அவர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்குத்தான் இந்தக் காலத்தில் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆனால், விஷால் அப்படிப்பட்டவர் அல்ல. சவாலான விஷயங்களை எடுத்துக் கொண்டு அதைப் பற்றித் துப்பறிபவர்.
விஷாலைத் தேடி ஒரு சிறுவன் அவன் வீட்டு நாய்க்குட்டியைக் கொலை செய்தவர்களைப் பற்றிக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்கிறான். சிறுவனின் வேண்டுகோளை ஏற்று களத்தில் இறங்குகிறார். ஆனால், அந்த விசாரணை சில கொலைகளையும், கடத்தல்களையும் நோக்கி நகர்கிறது. பணத்திற்காக எதையும் செய்யும் கும்பலான வினய், ஆன்ட்ரியா, பாக்யராஜ், ஜான் விஜய் ஆகியோர் அடங்கிய குழு பல திருட்டுத்தனங்களைச் செய்கிறார்கள். அவர்களுக்கும் அந்த நாய்க்குட்டி கொலைக்கும் தொடர்பு இருக்கிறது. அது எப்படி என்பதுதான் இந்தப் படத்தின் பல திருப்பங்களைக் கூடிய திரைக்கதை.
கணியன் பூங்குன்றன் ஆக விஷால். அவருடைய அறையே வித்தியாசமாக இருக்கிறது. தளத்தை முட்டும் உயரம் கொண்ட அலமாரியில் எண்ணற்ற புத்தகங்கள். வித்தியாசமான கொஞ்சம் உயரமான இருக்கை, தலையில் தொப்பி, எதற்கெடுத்தாலும் கோபம், ஆனால், அதிக புத்திசாலித்தனம் இதுதான் கணியன் பூங்குன்றன். விஷாலை காட்சிக்குக் காட்சி ரசிக்க வைக்கும் ஒரு அருமையான கதாபாத்திரம். கணியன் பூங்குன்றன் கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பால் தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார் விஷால்.
படத்தின் நாயகியாக அனு இம்மானுவேல். தமிழில் அறிமுகமாகும் முதல் படம். படத்தில் நாயகி இருந்தும் பாடல்கள் இல்லை, காதல் காட்சிகள் இல்லை. காதல் வெளிவரும் நேரத்தில் நடக்கக் கூடாத ஒன்று நடக்கிறது. மாடர்ன் தோற்றமும், குடும்பத் தோற்றமும் கலந்த கலவையாக இருக்கிறார் அனு இம்மானுவேல். தமிழ் சினிமா இவரை சரியாக பிடித்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது.
படத்தின் இரண்டாவது கதாநாயகன் பிரசன்னா. தொடர்ந்து பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்கிறார். இப்படி ஒரு நண்பன் கூடவே இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்கலாம்.
தமிழ் சினிமாவில் சில படங்களில் சாக்லேட் ஹீரோவாக நடித்த வினய் இந்தப் படத்தில் வில்லன். அந்த அப்பாவி முகத்திற்குக் கூட ஒரு வில்லன் தோற்றத்தைக் கொடுத்துவிடுகிறார் மிஷ்கின்.
அதிகம் பேசாமலே அழுத்தமான நடிப்பை ஆன்ட்ரியாவும், பாக்யராஜும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அரோல் கொரேலியின் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை வேறு ஒரு தளத்தில் உணர வைக்கிறது. இவரை ஏன் இன்னும் பல இயக்குனர்கள் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
கார்த்திக்கின் ஒளிப்பதிவும், அருண்குமாரின் படத் தொகுப்பும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்துகிறது.
சீன ரெஸ்ட்டாரென்ட் சண்டையும், கிளைமாக்ஸ் சண்டையும் ஹாலிவுட் பட அளவிற்கு இருக்கிறது. சண்டைப் பயிற்சியை தினேஷ் காசி அளித்துள்ளார்.
விஷால் துப்பறிந்து செல்லும் சில இடங்களில் பாக்யராஜ் மறைந்திருந்து பார்ப்பது எப்படி என்று தெரியவில்லை. அவர் எப்படி சரியாக அந்த இடத்திற்கு வருகிறார் என்பது புரியாத புதிர். காவல் துறையே விஷால் பின்னாடி வருவதும் நம்பும்படியாக இல்லை. படத்தின் நீளத்தைக் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
மிஷ்கின் – விஷால் கூட்டணியின் முதல் படமான ‘துப்பறிவாளன்’, வித்தியாசமான தமிழ்ப் படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பெறும்.