ஒரு படத்திற்கு வெறும் கதைக்களமும், கதாபாத்திரங்களும் மட்டும் போதாது. அவற்றைச் சிறப்பாக்கும் விதத்தில் நல்ல கதையும் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ரசிகர்களைக் கவரும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருக்கும்.
இந்தப் படத்தின் இயக்குனர் பாபா பாஸ்கர், அவர் வளர்ந்த இடங்களைப் பற்றியும், அவர் பார்த்த மனிதர்களைப் பற்றியும் படத்தில் சரியாகச் சேர்த்திருக்கிறார். ஆனால், அவற்றிற்கான ஒன்றுக்கொன்று முடிச்சான கதை இல்லாமல் போனதால் இந்த ‘குப்பத்து ராஜா’ ரசிகர்களிடம் ஆட்சி செய்ய முடியாமல் போய்விட்டார்.
வட சென்னையில் உள்ள ஒரு ஏரியா. தவணை கட்டாத பைக்குகளைத் தூக்கிக் கொண்டு வருபவராக ஜி.வி.பிரகாஷ்குமார். அவருடைய அப்பா எம்எஸ் பாஸ்கர், பார்த்திபன், மற்றும் சிலர் ஏரியாவின் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கும் ஜிவி பிரகாஷுக்கும் ஆகவே ஆகாது. ஒரு நாள் எம்எஸ் பாஸ்கர் கொல்லப்பட, அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
ஒரு படத்திலேயே பல விஷயங்களைச் சொல்ல வேண்டும் என இயக்குனர் நினைத்ததால் திரைக்கதை அல்லாடுகிறது. ஜிவி பிரகாஷ், பாலக் லால்வானி காதல், ஜிவி பிரகாஷ், பாஸ்கர் அப்பா மகன் பாசம், பார்த்திபனின் ஏரியா பாசம், பூனம் பஜ்வாவின் பிரகாஷ் மீதான பாசம், ஏரியா மக்களுக்காகச் செலவு செய்யத் தயங்காத சேட்டின் பணப் பாசம், அந்தப் பகுதி மக்களை வெறுக்கும் கவுன்சிலர் வில்லத்தனம் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் இரண்டிரண்டு காட்சிகள் என குழப்பத்துடன் கதையை நகர்கிறது. எப்படியோ ஆரம்பித்து, எப்படியோ நகர்ந்து, எப்படியோ முடிகிறது படம்.
ஜிவி பிரகாஷ் , தர லோக்கல் ஆசாமியாக நடிக்க கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவருடைய தோற்றமே அதற்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அவர் எகிறி எகிறி அடிக்கிறார் என்பது நம்பும்படியாக இல்லை.
பாலக் லால்வானி, காதல் நடிப்பதைக் காட்டுவதில் கூட ஓவர் ஆக்டிங் செய்கிறார். சரியான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்தால் தமிழில் ஒரு இடத்தைப் பிடிக்கலாம். யோகி பாபு எந்தக் காட்சியில் சிரிக்க வைத்தார் என்று யோசித்தால் ஞாபகமே வரவில்லை.
பூனம் பஜ்வா கதாபாத்திரம் எல்லாம் நம்பும்படி இல்லை. கிளாமருக்காக வலியத் திணிக்கப்பட்டது போன்று இருக்கிறது. ஏரியா மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும் பார்த்திபன் கதாபாத்திரத்தை வில்லனைப் போலக் காட்டுவது தேவையற்றது.
தான் நடிக்கும் படத்திற்கே சிறப்பான பாடல்களைப் போட முடியாமல் தவிக்கிறார் ஜிவி பிரகாஷ்குமார்.
படத்திற்காகப் போடப்பட்ட செட், கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு பொருத்தமாக உள்ளன. அதில் மட்டும் இயக்குனர் பாபா பாஸ்கர் பளிச்சிடுகிறார். கதை, திரைக்கதையில் எதை, எதையோ அள்ளிப் போட்டு படத்தை நிரப்பியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் வட சென்னை கதைகளுக்கு சில வருடங்களுக்கு ‘குட்பை’ சொல்வது நல்லது.