‘உத்தம வில்லன்’ – சரியான நேரத்தில் ஞானவேல்ராஜா செய்த உதவி…

100 ரூபாய் கடன் கேட்டாலே பல முறை யோசித்துப் பார்த்து கொடுக்கலாமா, வேண்டாமா என்று தயங்குபவர்கள் பலர். அதிலும் எந்த ஒரு தொழிலிலும் கடன் கொடுத்து உதவுவதற்கு உறவினர்களும், நண்பர்களுமே அதிகம் தயங்குவார்கள். அப்படியிருக்க சினிமாத் துறையில் ஒரு தயாரிப்பாளருக்கு மற்ற தயாரிப்பாளர் உதவ முன்வருவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்.

அப்படி ஒரு விஷயத்தை ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா செய்திருக்கிறார். ‘உத்தம வில்லன்’ பட விவகாரத்தில் சுமார் 30 கோடி வரை நிதிப் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த விவகாரத்தில் ‘உத்தம வில்லன்’ தயாரிப்பாளர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்ததோடு, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருக்கிறார்.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு சூர்யாவின் கால்ஷீட்டை வாங்கிக் கொடுத்ததன் மூலம் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிடுவதற்கு வழிவகை செய்திருக்கிறார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், வினியோகஸ்தர் அன்புச் செழியன் மற்றும் பல திரைப்பட சங்கங்களின் உதவியாலும் இப்படத்தின் பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ் ஆகிய இருவரும் அனைவரிடமும் இயல்பாகப் பழகும் குணம் கொண்டவர்கள். அவர்கள் மீதுள்ள நட்பு, மரியாதை காரணமாகவே ஞானவேல்ராஜா இந்த உதவியைச் செய்திருக்கிறார் என திரையுலகத்தின பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள்.

”ஞானவேல் ராஜா’வை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். இந்தப் படம் வெளிவருவதற்கு என்னுடனே அவர் கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பார்க்காமல் கூடவே இருந்து ஒத்துழைத்தார். இந்தப் படம் வெளிவர உதவிய மற்றவர்களுக்கும் நன்றி”, என திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி சற்று முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ஒருவர் மீது ஒருவர் பொறமைப்படும் இந்தக் காலத்தில் இவர்களைப் போன்ற நண்பர்கள் இருப்பது திரையுலகத்திற்கும் நல்லதுதான்.

 

Read Previous

உற்சாக வரவேற்பில் ‘உத்தம வில்லன்’

Read Next

தெலுங்கிலும் ‘காஞ்சனா 2’ மாபெரும் வெற்றி…

Most Popular