தமிழ்த் திரையுலகில் இப்படிக் கூட படங்கள் வருமா என ஆச்சரியப்பட வைத்திருக்கும் படம். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் போல் ஒரு சிலர் மட்டுமே சமூக அக்கறையுடன் படம் எடுக்க இருக்கிறார்களே என மனம் திறந்து பாராட்ட வைக்கிறது. சமீப காலங்களில் ஒரு படத்தில் நடித்துள்ள நாயகியின் அங்க அவயங்களைக் காட்டாமல், காதல், கீதல் என வழக்கமான மசாலாக்களை அரைக்காமல், ஹீரோ பறந்து பறந்து சண்டை போடாமல் ஒரு பரபரப்பான படமாக வந்திருக்கும் படம்தான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. மூன்றே மூன்று கதாபாத்திரங்கள், ஒரே ஒரு ஜெயில், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு படத்தை, ரசிக்கவும் வைத்து யோசிக்கவும் வைத்துள்ள இயக்குனர் ஜனநாதனுக்கு ஜனங்களின் பாராட்டு கண்டிப்பாகக் கிடைக்கும். இந்தியாவை வெளிநாடுகளின் குப்பைகளைக் கொட்டும் புறம்போக்கு இடமாக மாற்றுவதைத் தாங்கிக் கொள்ள முடியாத, பொதுவுடமை கொள்கை கொண்ட போராளி ஆர்யாவிற்கு அரசாங்கம் தூக்கு தண்டனை விதிக்கிறது. அவருக்கு அந்த தண்டனையை நிறைவேற்றும் பொறுப்பு காவல் துறை அதிகாரியான ஷாமிடம் ஒப்படைக்கப்படுகிறது. தூக்கு தண்டனைக் கைதி ஆர்யாவை அழைத்துக் கொண்டு சென்னைச் சிறைச்சாலைக்கு வருகிறார் ஷாம். ரயில்வேயில் கலாசியாக இருக்கும் விஜய் சேதுபதிதான் தூக்குப் போடும் வேலையைச் செய்யும் ஹேங்மேன். 18 வயதில் ஒரு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியதால் அந்த வேலையே வேண்டாமென வெறுப்பவரை, எப்படியாவது வழிக்குக் கொண்டு வரப் போராடுகிறார் ஷாம். இதனிடையே ஆர்யாவைக் காப்பாற்ற அவருடைய குழுவினர் கார்த்திகா தலைமையில் முயற்சி எடுக்கிறார்கள். ஆர்யாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. ஒரு படத்தில் மூன்று ஹீரோக்கள், தமிழ் சினிமாவின் ஆச்சரியங்களில் இதுவும் ஒன்று. முதலில் இப்படிப்பட்ட ஒரு கதையில் தங்களையும் ஈடுபடுத்திக் கொள்ள முன்வந்த ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோருக்குப் பாராட்டுக்கள். வழக்கமான சினிமாவிலிருந்து விலகி இப்படிப்பட்ட புதிய பாதையையும், படத்தையும் அவர்களும் தர நினைக்கும் போதுதான் சினிமாவும் புத்துணர்வு பெறுகிறது. தூக்குத் தண்டனைக் கைதி பாலுவாக ஆர்யா. பொதுவுடமை சித்தாந்தத்தில் அதிகப் பற்று கொண்டவர். இந்த நாட்டைக் கெடுக்க முயல்பவர்களுக்கு எதிராகப் போராடி கைதாகி தூக்கு தண்டனையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். இதுவரை ஆர்யா நடித்த படங்களிலும், கதாபாத்திரங்களிலும் ‘தி பெஸ்ட்’ இந்த ‘புறம்போக்கு பாலு’ என்று இன்னும் பல வருடங்கள் ஆனாலும் பேசப்படும் ஒரு கதாபாத்திரம். சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்காகவும் சட்டப்படி பல நல்ல விஷயங்கள் நடக்கக் காரணமாக இருக்கிறார். ஒரு உண்மையான போராளியின் வாழ்க்கை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் இருக்கும் என்பதை பாலு கதாபாத்திரம் மூலம் அருமையாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். எந்த கதாபாத்திரம் என்றாலும் தன்னை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி. எமலிங்கம் கதாபாத்திரத்தில் எமகாதகனாக நடித்திருக்கிறார். வேறு ஒரு உயரத்திற்குப் போக வேண்டிய நடிகர் விஜய் சேதுபதி. இது போன்றே கவனமான கதாபாத்திரங்களையும், படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் அடுத்த கமல்ஹாசன் விஜய் சேதுபதிதான். அவருடைய நடிப்பிற்கு அவருடைய குரலும், வசன உச்சரிப்பும் மிகவும் பக்கபலமாக உள்ளது. ஜாலியாகக் குடித்துக் கொண்டிருப்பவர், ஷாம், தூக்குப் போட வர வேண்டும் என்று சொன்னதுமே ஒரு பார்வை பார்த்து வாந்தி எடுக்கிறாரே…அந்த ஒரு காட்சி போதும், அவருடைய நடிப்பிற்கு. வெல்டன் விஜய்சேதுபதி. ஷாம், இவரை தமிழ் சினிமா இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலே இருக்கிறதே என பல சுமாரான படங்களில் அவர் நடிக்கும் போதெல்லாம் யோசிப்பது வழக்கம். அந்த எண்ணம் இயக்குனர் ஜனநாதனுக்கும் இருக்கும் போல. ஏற்கெனவே அவர் அறிமுகமான ‘இயற்கை’ படத்தில் ஷாமை அற்புதமாகப் பயன்படுத்தியவர், இந்தப் படத்தில் ‘மெக்காலே’ கதாபாத்திரத்தில் அனைவரும் மெச்ச வைக்கும்படி நடிக்க வைத்து விட்டார். ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்குரிய அதிகாரம், பார்வை, உடல் மொழி, அதே சமயம் கொஞ்சம் இரக்கம் என ஷாம், சிம்ப்ளி சூப்பர்ப். கிளைமாக்சுக்கு முன்பாக ஆர்யாவிடம் தனியாகப் பேசும் அந்தக் காட்சியில் இருவரு கதாபாத்திரத்தின் தன்மையும் அப்படி வெளிப்பட்டிருக்கிறது. குறைவான படங்களில் நடிப்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் ஷாம், இப்படி நிறைவான கதாபாத்திரங்களில் நடித்தாலே போதும், உங்கள் பெயர் பல காலம் நிலைத்திருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகியை இப்படிக் காட்டியிருப்பது இதுவே முதல் முறை என்று சொல்ல வைக்கும். பைக் ஓட்டிக் கொண்டு, எதையும் செய்யும் ஒரு துணிச்சல் மிக்கப் போராளியாக நடித்திருக்கிறார் கார்த்திகா. எந்த இடத்திலும் அவருடைய கண்களைத் தவிர வேறு ஒரு இடத்திற்கு நம் கண்கள் அகல மறுக்கிறது. அந்த அளவிற்கு கண்ணியமான கதாநாயகியைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் ஜனநாதன். நீண்ட நாட்களாக காத்திருந்த கார்த்திகாவிற்கு இந்தக் குயிலி கதாபாத்திரம் பாராட்டுக்களைக் குவிக்கப் போவது நிச்சயம். நட்சத்திரங்களுக்குப் பிறகு அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் கலை இயக்குனர் வி.செல்வகுமார். அவ்வளவு பெரிய சிறைச்சாலையை எந்த ஒரு காட்சியிலும் அது ஒரு ‘செட்’ என்ற தோற்றத்தைக் கொடுக்காத அளவிற்குப் படைத்திருக்கிறார். அதை அவ்வளவு யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம். படத்தில் எந்த ஒரு காட்சியும் தேவையற்ற காட்சியும் இடம் பெறவில்லை. கணேஷ்குமாரின் படத்தொகுப்பு ஒவ்வொரு காட்சிகளையும் அதன் தன்மை கெடாமல் விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறது. இப்படிப்பட்ட படங்களில் பாடல்களே இல்லையென்றாலும் கூட பரவாயில்லை, இருந்தாலும் வர்ஷன் இசையில் இடம்பெற்றுள்ள குறைவான பாடல்களும் நிறைவாக இடம் பெற்றுள்ளன. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சியையும் அந்த அளவிற்கு உயிரோட்டமாய் காட்ட உதவியிருக்கிறது.