தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகை என்று பெயரெடுத்த ஜோதிகா, திருமணத்திற்குப் பிறகு எட்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நாயகியாக நடித்து வெளிவந்திருக்கும் படம். வழக்கமான ஒரு கதையைத் தேர்ந்தெடுக்காமல் பெண்ணுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகத் தேர்ந்தெடுத்து புதிய பாதை ஒன்றை வகுத்திருக்கிறார். பெண்கள் சாதிப்பதற்கு திருமணம், குடும்பம் ஆகியவை ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் படம். திருமணத்திற்கு முன்பு பல கனவுகளுடன், பல திறமைகளுடன் இருக்கும் பெண்களுக்கு திருமண வாழ்க்கை வேறு ஒரு உலகத்தைத் திறந்து வைத்து விடுகிறது. அவர்களுடைய திறமைகள் அப்படியே அமுக்கப்பட்டு விடுகின்றன. அந்த இருட்டிலிருந்து அவர்கள் விடுபட்டு சாதிக்க வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கும் படம். சாதிப்பதற்கு வயதும் வாழ்க்கையும் ஒரு தடையல்ல, சந்தர்ப்பத சூழ்நிலைகள் எப்படி அமைந்தாலும் சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் மட்டும் குறையக் கூடாது என்பதை இதை விட நேர்த்தியாகச் சொல்ல முடியாது. தாலுகா அலுவலகத்தில் ஒரு கிளார்க்காக வேலை பார்ப்பவர் ஜோதிகா. இவரின் கணவர் ரகுமான் வானொலி நிலையத்தில் வேலை பார்க்கிறார். இந்தத் தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகள். வெளிநாட்டில் சென்று வேலை பார்த்து சம்பாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர் ரகுமான். மகளையும் வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வெளிநாடு சென்று வேலை பார்ப்பதற்கான ஒரு நேர்முகத் தேர்வில் ஜோதிகா தேர்வாகாமல் போய் விடுகிறார். அதனால் ரகுமானும், மகளும் மட்டும் வெளிநாடு போகிறார்கள். அந்தச் சமயத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் ஒரு வாய்ப்பு ஜோதிகாவிற்கு கிடைக்கிறது. ஆனால், அவரைச் சந்திக்கும் சமயத்தில் டென்ஷனில் அவர் மயங்கி விழுந்து விடுகிறார். அனைவரும் ஜோதிகாவைக் கிண்டலடிக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் தனி பக்கம் ஆரம்பிக்கும் அளவிற்கு நிலைமை ஆகிவிடுகிறது. அப்படியிருந்தவர் பின்னர் குடியரசுத் தலைவரே அழைத்து பாராட்டும் அளவிற்கு உயர்கிறார். அது எப்படி என்பதுதான் படத்தின் கதை. ஜோதிகாவின் நடிப்பு எப்படிப்பட்டது என்பது நம் அனைவருக்குமே தெரியும். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த ‘மொழி’ திரைப்படத்தில் பேசாமலே நடிப்பு மொழியை நமக்குப் புரிய வைத்தவர். அந்தத் திறமை எட்டு ஆண்டுகள் கழித்தாலும் எங்கேயும் போய்விடாது என்பதை படம் முழுதும் வெளிப்படுத்தியிருக்கிறார். பல கனவுகளுடன் இருந்தாலும் குடும்பத்திற்காக தங்களை ஓடாய்த் தேய்த்துக் கொள்ளும் நடுத்தரக் குடும்பத்து மனைவியர்களை அப்படியே கண்முன் நிறுத்தியுள்ளார் ஜோதிகா. தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஜோதிகாவின் கணவராக ரகுமான். 80களில் பல குடும்பப் பாங்கான கதைகளில் நடித்து தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவுடன் இருந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு படத்தில் நடித்துள்ளார். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பத்து அப்பாவின் ஆசைகளை அப்படியே காட்டியுள்ளார். ஜோதிகாவின் மகளாக நடித்திருக்கும் அமிர்தா டீன் ஏஜ் வயதுப் பெண்களின் குணாதிசயத்தை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜோதிகாவின் அலுவலகத் தோழியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி, கல்லூரித் தோழியாக நடித்திருக்கும் அபிராமி, சில காட்சிகளில் மட்டுமே வரும் நாசர், டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஜெயப்பிரகாஷ், மோகன்ராமன், சுஜாதா, போஸ் வெங்கட், பிரேம் அனைவரின் கதாபாத்திரங்களும் நிறைவாக அமைக்கப்பட்டுள்ளன. சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘வாடி ராசாத்தி…’ வித்தியாசமான குரலுடன் வசீகரிக்கிறது. திவாகரன் ஒளிப்பதிவு சென்னை, திருவல்லிக்கேணியை யதார்த்தம் மீறாத அழகுடன் காட்டி ரசிக்க வைக்கிறது.