சினிமாவில் தனியார் அமைப்புகள் தரும் விருதுகள் கேலிக்கூத்தாகும் இக்காலத்தில் சில விருதுகளுக்கு மட்டும் தான் மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.
அதில் தேசிய விருதும், அந்த தேசிய விருதுக்கு நிகராக இந்திய சினிமாவே மதிக்கும் கொல்லப்புடி சீனிவாஸ் தேசிய விருதும் அடக்கம். முதல் படத்தை இயக்கும் முயற்சியில், படப்பிடிப்புத் தளத்திலேயே விபத்தில் தன் மகனைப் பறி கொடுத்த கொல்லப்புடி மாருதிராவ் விதைத்த விதை இது.
இன்று இந்திய சினிமாவில் மூலை முடுக்கெல்லாம் தேடி அறிமுக இயக்குனர்களில் திறமைசாலியை அடையாளம் கண்டு அவருக்கு வழங்கப்படுகிறது. இத்தனை சிறப்புமிக்க கொல்லப்புடி விருதை 2008ல் அமீர் கான் ’தாரே ஜமீன் பார்’ படத்துக்கு வாங்கிய போது கண்ணீர் விட்டு அழுதது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு இந்த மதிப்புமிக்க விருதை பெற்றவர் ஹிந்தி அறிமுக இயக்குனர் சஞ்சீவ் குப்தா. வரும் டிசம்பரில் திரைக்கு வரவிருக்கும் அவரது ‘க்யூ’ படம் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் திரைப்பட விழாக்களில் விருது
வென்றிருக்கிறது. விருதுகளைக் குவித்து வரும் படத்துக்கு மணி மகுடமாக நமது தமிழ்நாட்டு கொல்லப்புடி சீனிவாஸ் விருதும் கிடைத்திருக்கிறது.
கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வரும் ஒரு பெண்ணைப் பற்றிய மிக இயல்பான படம் தான் ‘க்யூ’. இந்த விருது வாங்கியது பற்றி சஞ்சீவ் குப்தாவிடம் கேட்டோம்.
எனக்கு ரொம்ப சந்தோஷமான தருணம் இது. அறிமுக இயக்குனருக்கு மட்டுமே இந்த விருது கிடைக்கும் என்ற நிலையில் நான் வாங்கியிருக்கிறேன். 27 அறிமுக இயக்குனர்கள் என்னுடன் போட்டியில் இருந்ததாக சொன்னார்கள்.
தேசிய விருதுக்குக் கூட விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இந்த விருதுக்கு யாரும் விண்ணப்பிக்க கூட தேவையில்லை. திறமையானவர்களை அவர்களே தேடி அடையாளம் கண்டுகொள்கின்றனர். கடுமையான போட்டிக்கு பிறகு தான் நான் வென்றிருக்கிறேன். இது தேசிய விருதுக்கு சமம். சினிமாவை நேசிக்கும் எவருக்கும் இந்த விருது ஒரு கனவாக, லட்சியமாக இருக்கும்.
2006ல் நான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். சினிமா தான் என் வாழ்க்கை என முடிவெடுத்தேன். அதில் இருந்தே சிரமங்கள் தொடங்கிவிட்டன. கமர்ஷியல் படங்களை விடுத்து இதுபோன்ற இயல்பான படங்கள் எடுக்க தான் ஆசை.
படத்தின் சப்ஜெக்ட் என்ன கேட்கிறதோ அதை மட்டும் தான் தர வேண்டும். இந்த படம் வெறும் 96 நிமிடங்கள் தான். ஒரு ஃப்ரேம் கூட கதைக்கு தேவையில்லாமல் இருக்காது.
பாலிவுட்டில் எல்லோரும் பாரபட்சமில்லாமல் புகழ்வது எனக்கு கூச்சமாக இருக்கிறது. எடுக்கும் போது பட்ட கஷ்டங்கள் எல்லாம் இப்போது பறந்துபோய்விட்டது.
தென்னிந்திய சினிமாக்கள் மிகவும் பிடிக்கும், ஐ லவ் ஆல். ரொம்ப வித்தியாசமான முயற்சிகள் இங்கே இருக்கு. அதை ஆடியன்ஸும் ஏத்துக்கிறாங்க. பீட்ஸா, ட்ராஃபிக் மாதிரியான படங்கள் என்னைக் கவர்ந்தவை.
சத்யஜித்ரே என்னுடைய ரோல் மாடல். சினிமா கற்க விரும்புபவர்கள் தவிர்க்கவே கூடாத பெர்சனாலிட்டி.
அடுத்து ஒரு படத்துக்கான எழுத்துப்பணிகள் சென்றுகொண்டிருக்கிறது. குறும்படங்கள் இயக்கவும் திட்டங்கள் இருக்கிறது.
எதிர்காலத்தில் கமர்ஷியல் படங்கள் இயக்கும் வாய்ப்பே இல்லை என சொல்லிவிட முடியாது. ஒரு இயக்குனராக எல்லாவகை படங்களும் எடுக்கத்தான் ஆசை. அதுதானே சிறந்த இயக்குனருக்கான தகுதி,” என்கிறார் சஞ்சீவ் குப்தா.