டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் – விமர்சனம்

ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், ஸ்ஸாரா பாலேகர், சௌரப் சச்தேவா, மகேஷ் மஞ்ச்ரேக்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், ஃபஹத் ஃபாசில் தெலுங்கில் தனி கதாநாயகனாக நடித்துள்ள முதல் படமாகவும் அமைந்துள்ளது. பணம் சம்பாதிப்பதற்காக குறுக்கு வழிகளைத் தேடி வாழும் ஒருவனின் வாழ்க்கையில், எதிர்பாராத விதமாக ஒரு சிறுமி நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை ஃபேண்டஸி, நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படம்தான் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’.

சூரி என்ற அனாதை இளைஞர், யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில் தயக்கம் இல்லாதவர். அவசர ஊர்தி ஓட்டுநராக வேலை பார்த்தாலும், கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவரிடம் சிக்கிக் கொள்ளும் சூரி, குறிப்பிட்ட காலத்திற்குள் பெரும் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது அவருடைய வாழ்க்கையில் திவ்யா என்ற சிறுமி வருகிறார். ஆரம்பத்தில் அந்த சிறுமியை தனது பணத் தேவைக்காக பயன்படுத்த நினைக்கும் சூரியின் மனநிலையும் மெல்ல மாறத் தொடங்குகிறது. திவ்யாவுக்கு உண்மையிலேயே அமானுஷ்ய சக்திகள் இருப்பது தெரியவர, இருவருக்கும் இடையே உருவாகும் பாசமும், அவர்களின் எதிர்பாராத பயணமும் கதையின் மையமாகிறது.

ஃபேண்டஸி கதையை மிகப்பெரிய உலகமாக உருவாக்காமல், சூரி மற்றும் திவ்யா ஆகிய இரு கதாபாத்திரங்களின் உறவை மையமாக வைத்து இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி படத்தை நகர்த்தியிருக்கிறார். குறிப்பாக முதல் பாதியில் சூரி, திவ்யாவின் மாயாஜால சக்திகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காட்சிகள் இயல்பான நகைச்சுவையுடன் ரசிக்க வைக்கின்றன. கதையின் மையக் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவு படிப்படியாக வளர்வதும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் சில நீளமான காட்சிகள் கதையின் வேகத்தை சற்று குறைத்தாலும், இறுதிப்பகுதியில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை முடித்திருப்பது கவனம் பெறுகிறது.

சூரி கதாபாத்திரத்தில் பஹத் பாசில் வழக்கம்போல் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். பணத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் மனிதராக அறிமுகமாகி, திவ்யாவை சந்தித்த பிறகு அவருக்குள் ஏற்படும் மாற்றத்தை சிறிய முகபாவனைகளிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக திவ்யாவின் சக்திகளைப் பார்த்து அவர் குழம்பும் காட்சிகள் நகைச்சுவையாக அமைந்திருக்கின்றன. திவ்யாவாக நடித்திருக்கும் ஸாரா பாலேகரும் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். பஹத் – ஸாரா இடையேயான உறவு படத்தின் உணர்வுப்பூர்வமான பகுதிகளுக்கு வலு சேர்க்கிறது. மகேஷ் மஞ்ச்ரேக்கர், சௌரப் சச்தேவா, வெங்கடேஷ் காகுமனு உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியுள்ளனர்.

கால பைரவாவின் இசை, படத்தின் பேண்டஸி தன்மைக்கும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கும் பொருத்தமாக அமைந்துள்ளது. குறிப்பாக பின்னணி இசை, நகைச்சுவை மற்றும் மாயாஜால காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது. பிராட் ஃபிரான்சிஸின் ஒளிப்பதிவு நகர்ப்புறக் காட்சிகளையும், சூரி – திவ்யா பயணிக்கும் காட்சிகளையும் அழகாக பதிவு செய்துள்ளது. பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு பெரும்பாலான இடங்களில் கதையின் ஓட்டத்திற்கு துணை நிற்கிறது. கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளும் படத்தின் ஃபேண்டஸி உலகத்திற்கு தேவையான தோற்றத்தை உருவாக்குகின்றன.

இரண்டாம் பாதியில் சில காட்சிகளை இன்னும் சுருக்கமாக அமைத்திருக்கலாம் என்பதே படத்தின் முக்கிய குறையாகத் தெரிகிறது.

வழக்கமான பேண்டஸி கதையாக இருந்தாலும், பஹத் பாசிலின் இயல்பான நடிப்பும், சிறுமி திவ்யாவுடனான அவரது உறவும், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தை குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றியிருக்கிறது.

Read Previous

இயக்கம், நடிப்பு – ஜேசன் சஞ்சய் பதில்

Read Next

சிக்மா – விமர்சனம்